காங்கேயம் அருகே மன்னர் காலத்து தங்க காசு தருவதாக கூறி வாலிபரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது


காங்கேயம் அருகே மன்னர் காலத்து தங்க காசு தருவதாக கூறி வாலிபரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2018 11:00 PM GMT (Updated: 2 Feb 2018 7:48 PM GMT)

காங்கேயம் அருகே மன்னர் காலத்து தங்க காசு தருவதாக கூறி, வாலிபரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காங்கேயம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கோகுல்(வயது 29). இவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம ஆசாமிகள், “ தங்களிடம் மன்னர் காலத்து புதையலில் கிடைத்த தங்க காசுகள் இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்கு தருவதாகவும் பணத்துடன் காங்கேயம் வந்தால் மேற்கொண்டு பேசலாம் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டனர். யார் என்றே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பேசியது ஒரு பக்கம் தயக்கமாக இருந்தாலும், மறுபக்கம் குறைந்த தொகைக்கு தங்கப்புதையல் கிடைத்தால் யோகம்தானே என்று பணத்துடன் கோகுல் ஒரு காரில் நேற்று முன்தினம் புறப்பட்டார். அப்போது அந்த காரில் சில நண்பர்களையும் அழைத்து வந்துதார்.

காரில் வரும்போதே அந்த ஆசாமிகளின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட கோகுல், எந்த இடத்திற்கு வர வேண்டும் என்று கேட்டார். அப்போது காங்கேயம் அருகே முத்தூர் ரோட்டில் வருமாறு கூறினார்கள். இதையடுத்து கோகுல் அவர்கள் கூறிய இடத்திற்கு நண்பர்களுடன் வந்தார்.

அப்போது அங்கு ஒரு காரில் 3 ஆசாமிகள் காத்து இருந்தனர். அவர்கள் கோகுலிடம், “தாங்கள் வைத்து இருக்கும் தங்க காசுகள் மன்னர் காலத்தில் புதையலில் கிடைத்த தங்க காசு என்றும், இது போல் காசு வேண்டும் என்றால் முதலில் ரூ.50 ஆயிரம் தாருங்கள், அதன்பின்னர் எங்களிடம் உள்ள தங்க காசுகளை தருகிறோம்“ என்றனர். இதற்கிடையில் அந்த ஆசாமிகள் வந்த காரின் பின் பகுதியில் உள்ள நம்பர் பிளேட்டில் ஒரு எண்ணும், முன் பகுதியில் உள்ள நம்பர் பிளேட்டில் வேறு ஒரு எண்ணும் இருந்ததால் கோகுலின் நண்பர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே காங்கேயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். இதையடுத்து அந்த 3 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்த ராஜா (53), சேலம் மாவட்டம் குகையை சேர்ந்த ராஜேந்திரன் (61), ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த பாபுபுருஷோத்தமன் (50) என்பதும் தெரியவந்தது.

இவர்களுக்கு ராஜா என்பவர்தான் தலைவராக இருப்பதும், இவர்கள் கொண்டு வந்த காரும், ராஜாவுக்கு சொந்தமானது என்பதும், அந்த காரில் உள்ள நம்பர் பிளேட் குளறுபடியாக இருப்பதும் தெரிய வந்தது.

இவர்கள் 3 பேரும் திட்டமிட்டு பலபேரிடம் செல்போன்களில் பேசி, இவர்கள் வலையில் சிக்கும் நபர்களை ஏமாற்றி பணம் பறிப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதையடுத்து இவர்கள் 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து தலா ஒரு கிராம் எடையுள்ள 2 காசுகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் காங்கேயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ராஜா என்பவர் மீது ஏற்கனவே இதுபோன்ற மோசடி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் அந்த ஆசாமிகள் வைத்திருந்த 2 காசுகளும் தங்க காசுதான் என்று போலீசார் தெரிவித்தனர். தங்ககாசு தருவதாக கூறி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்து இருப்பது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story