நீத்தி வனப்பகுதியில் பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் பரபரப்பு


நீத்தி வனப்பகுதியில் பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Feb 2018 3:45 AM IST (Updated: 5 Feb 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே நீத்தி வனப்பகுதியில் பூமிக்கடியில் இருந்து மீண்டும் வெளிவரும் புகையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஊட்டி,

ஊட்டி அருகே உள்ள தலைகுந்தாவில் இருந்து அத்திக்கல் கிராமத்திற்கு செல்லும் வழியில் நீத்தி வனப்பகுதி உள்ளது. நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட இந்த வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் இருந்து திடீரென புகை வெளிவந்து கொண்டே இருந்தது. இதனை கண்டு வனத்துறையினரும், அத்திக்கல், முத்தநாடு மந்து, தலைகுந்தா ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் வியப்படைந்தனர்.

 பின்னர் ஒரு சில நாட்களில் பூமிக்கடியில் இருந்து புகை வெளியே வருவது தானாகவே நின்று விட்டது. இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் அதே இடத்தில் புகை வந்தது. அதனை தொடர்ந்து நீலகிரி வடக்கு வனக்கோட்ட வனத்துறையினர் அந்த புகை எதனால் வெளிவருகிறது? என்பதை கண்டறியவும், அதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியையும் மேற்கொண்டனர்.

அப்போது புகை வரும் இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டு, பூமிக்கடியில் இருந்து வெளிவந்த புகை கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் புவியியல் துறையினர் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த மண் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த ஆய்வின் முடிவில், புகை வெளிவரும் பகுதியின் அடிப்பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பு கற்பூர மரங்களின் கிளைகள் புதைந்து இருக்கலாம் என்றும், பூமியின் வெப்பம் அதிகரிப்பால் அந்த கற்பூர இலைகள் தீப்பற்றி எரிவதால், புகை வெளியே வருவதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21–ந் தேதி நீத்தி வனப்பகுதியில் பூமிக்கடியில் இருந்து புகை வெளிவந்தது.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக அப்பகுதியில் புகை இன்றி காணப்பட்ட நிலையில், நேற்று நீத்தி வனப்பகுதியில் மண் பிளவு ஏற்பட்டு மீண்டும் புகை வெளிவர தொடங்கி உள்ளது. இந்த புகை பெரும் வெப்பத்துடன் வெளிவருவதால், அப்பகுதியில் உள்ள புற்கள், புல்வெளிகள், மரக்கிளைகள் கருகி விட்டன. மேலும் கற்பூர மரங்களின் வேர்கள் கருகுவதல், அந்த மரங்கள் விழ தொடங்கி உள்ளன. பூமிக்கடியில் இருந்து புகை ஒருவிதமான தூர்நாற்றத்துடன் வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியை சுற்றி உள்ள கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நீலகிரி வடக்கு வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் சரவணன் கூறியதாவது:–

நீத்தி வனப்பகுதியில் மரங்களில் இருந்து கீழே விழுந்த இலைகள், தழைகள், செடிகள் பூமிக்கடியில் காணப்படுகிறது. அவை மக்கும் போது பூமிக்கடியில் வெப்பம் ஏற்படுகிறது. அப்பகுதியின் மேல்பகுதியில் மண் இறுக்கமாக இல்லாததால், புகை வெளியே வரும். இதனால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டது.

இதுகுறித்து புவியியல் சுரங்கம் மற்றும் கனிமவள அதிகாரிகள் அந்த மண்ணை ஆய்வு செய்து, பூமிக்கடியில் வெப்பம் உண்டாகும் போது இதுபோன்று ஏற்படும் என்று தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story