திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை முதல் கட்டமாக 45 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்த நடவடிக்கை


திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை முதல் கட்டமாக 45 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Feb 2018 4:15 AM IST (Updated: 6 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை முதல் கட்டமாக 45 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

திருவெறும்பூர்,

திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி உயிர்ப்பலி வாங்கும் விபத்துகள் நடப்பதால் பழைய பால்பண்ணை ரவுண்டானாவில் இருந்து துவாக்குடி வரை அகலப்படுத்தி அணுகுசாலை அமைக்க வேண்டும் என்பது இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும்.

இதற்காக சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி உள்ளனர். ஆனாலும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம், ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு போன்ற காரணங்களால் அணுகுசாலை அமைக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் பாய்லர் ஆலை விருந்தினர் விடுதியில் நேற்று ப.குமார் எம்.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆலோசனை குழு தலைவர் ஹேமந்த் ராவ், தஞ்சாவூர் பகுதி திட்ட இயக்குனர் சுதாகர் ரெட்டி, பெல் பொது மேலாளர் ஆதிமூலம், சர்வீஸ் சாலை கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் குமார் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை ரவுண்டானா முதல் துவாக்குடி வரை முதல் கட்டமாக 45 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். 45 மீட்டருக்கு தேவையான நிலத்தை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கையகப்படுத்தி ஒப்படைக்கும்படி கலெக்டரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டில் உள்ள வழக்கு முடிவுக்கு வந்த பின்னர் இரண்டாம் கட்டமாக 60 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தப்படும்.

பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அதிக அளவில் விபத்து ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ள அண்ணா வளைவு, திருவெறும்பூர் பஸ் நிலையம், மஞ்ச திடல், ஆயில் மில், எஸ்.ஐ.டி. ஆகிய 5 இடங்களில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருந்தது. உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டால் வாகனங்கள் சாலையை கடந்து செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அந்த இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என மத்திய தரைவழி போக்குவரத்து துறை மந்திரியிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story