மொபட் ஓட்டி பழகிய போது பாலத்தில் மோதி அக்காள்-தங்கை பலி


மொபட் ஓட்டி பழகிய போது பாலத்தில் மோதி அக்காள்-தங்கை பலி
x
தினத்தந்தி 8 Feb 2018 3:45 AM GMT (Updated: 8 Feb 2018 3:02 AM GMT)

மேலூர் அருகே மொபட் ஓட்டி பழகியபோது பாலத்தில் மோதி சகோதரிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலூர்,

மதுரை மேலூர் அருகே உள்ள சின்னசூரக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 மகள்கள் உண்டு. மூத்த மகள் வெண்ணிலா (வயது 19) செட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இளைய மகள் பிரியங்கா (15) மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

அரசு மானிய விலையில் வழங்கும் இரு சக்கர வாகனத்தை பெறும் எண்ணத்தில் இருந்த வெண்ணிலா கடந்த 4-ந்தேதி தனது உறவினர் ஒருவரின் மொபட்டை ஓட்டி பழகியுள்ளார். அவ்வாறு பழகும்போது தனது தங்கை பிரியங்காவையும் பின்னால் அமர வைத்துக்கொண்டு மொபட் ஓட்டியுள்ளார்.

சின்னசூரக்குண்டு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத தர்மசானப்பட்டி ரோட்டில் மொபட்டை ஓட்டி பழகியபோது எதிர்பாராத விதமாக கால்வாய் பாலத்தின் மீது மொபட் மோதியுள்ளது. இதில் வெண்ணிலாவும், அவரது தங்கை பிரியங்காவும் தலையில் பலத்த காயம் அடைந்தனர். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால் நீண்ட நேரம் படுகாயத்துடன் அவர்கள் மயக்கம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளனர்.

பின்னர் அந்த வழியே வந்தவர்கள் பார்த்து இருவரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த பிரியங்கா நேற்று முன் தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் வெண்ணிலாவும் நேற்று சிகிச்சை பலன் இன்றி பலியானார். விபத்தில் பலியான சகோதரிகளின் உடலைப் பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story