மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்


மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2018 4:00 AM IST (Updated: 10 Feb 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது ரெட்டம்பேடு கிராமம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவம்பேடு என்ற கிராமத்தில் இருந்து அந்த பகுதி பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட மதுக்கடை ஒன்று ரெட்டம்பேடு கிராமத்தில் உள்ள வலைகூண்டு என்ற இடத்தில் வயல்வெளியை ஒட்டி புதிதாக அமைக்கப்பட்டது.

விவசாய விளைநிலத்தில் பெண்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டு உள்ள இந்த புதிய மதுக்கடையை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு அந்த பகுதி பெண்கள் தொடர்ந்து பல மனுக்களை அனுப்பி வைத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட இல்லை.

இந்த நிலையில் நேற்று மேற்கண்ட மதுக்கடை திறப்பதற்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் மகளிர் குழு நிர்வாகி சந்திரா தலைமையில் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நீண்ட நேரம் அவர்கள் போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் யாரும் அங்கு பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் இருந்து தேவம்பேடு நோக்கிச்செல்லும் சாலைக்கு சென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து தாசில்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட மதுக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனையடுத்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story