ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் செவிலியர்களை பணியமர்த்த வேண்டும்


ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் செவிலியர்களை பணியமர்த்த வேண்டும்
x
தினத்தந்தி 13 Feb 2018 4:00 AM IST (Updated: 13 Feb 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அனுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 203 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி-பெரியம்மாள் ஆகியோரின் 12 வயது மகன் வெங்கடேஷ் 2015-ம் ஆண்டு பொன்னேரியில் நீரில் மூழ்கி இறந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியின் கீழ் அரசு ஒப்பளிப்பு செய்துள்ள ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

குன்னம் வட்டம் பெருமாள்பாளையம் கிராம மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், நாங்கள் அனைவரும் மத்திய பிரேத மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்து கடந்த 1988-ல் அப்போதைய முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் முயற்சியால் மீட்கப்பட்டு பெருமாள் பாளையத்தில் குடியமர்த்தப்பட்டோம். மேலும் கல்குவாரி உரிமம் வழங்கியதால் நாங்கள் கல் உடைத்து பிழைப்பு நடத்தினோம். தற்போது எங்களுக்கு உரிமம் வழங்க மறுக்கின்றனர். எனவே எங்களுக்கு கல் உடைக்க உரிமம் வழங்க தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல், வேப்பந்தட்டை அருகே அனுக்கூரை சேர்ந்த கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியிலுள்ள அனுக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எசனை, பாப்பாங்கரை, சிறுவயலூர், பிரம்மதேசம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து மக்கள் வந்து மருத்துவ சேவையை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில், இரவு நேரங்களில் செவிலியர்கள் அங்கு பணியில் இல்லாததால் பிரசவம் பார்ப்பது உள்ளிட்டவற்றுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் தேள் கடி உள்ளிட்டவற்றுக்கு உடனடி சிகிச்சை அளிக்க முடியாமல் போகிறது. எனவே இரவு நேரங்களில் செவிலியர்களை நியமித்து சுகாதார நிலையம் இயங்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story