கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 85 பவுன் நகை-பணம் கொள்ளை

கொளத்தூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 85 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
செங்குன்றம்,
சென்னை கொளத்தூர் சரோஜினி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் முரளிபாஸ்கர் (வயது 30). இவர் சென்னை அடுத்த அம்பத்தூர் கொரட்டூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவி புவனேஸ்வரி, மகன்கள் விஜயஹரி, சாய்விஷ்னு ஆகியோருடன் திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீடு திரும்பினர்.
85 பவுன் நகை கொள்ளை
அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பூட்டை உடைத்து சென்ற மர்ம ஆசாமிகள் பீரோவை உடைத்து அதிலிருந்த 85 பவுன் நகைகளையும், ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 வைர கம்மல், ¼ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.49 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முரளிபாஸ்கர் கொளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முனிசேகர் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
கொள்ளை நடந்த இடத்திற்கு அண்ணாநகர் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர், வில்லிவாக்கம் உதவி கமிஷனர் முத்துமணிகண்டன் ஆகியோர் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story