சர்வேயருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு


சர்வேயருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 15 Feb 2018 4:45 AM IST (Updated: 15 Feb 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தை அளவீடு செய்து பட்டா மாறுதல் செய்ய ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் சர்வேயருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள துத்திக்குளத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 72). ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் தனது நிலத்தை அளவீடு செய்து, பட்டா மாறுதல் வழங்கக்கோரி, காளப்பநாயக்கன்பட்டி சர்வேயர் சம்பத்குமார் (58) என்பவரிடம் மனு கொடுத்தார்.

அதற்கு, ரூ.500 லஞ்சம் தரவேண்டும் என சர்வேயர் சம்பத்குமார் கேட்டுஉள்ளார். லஞ்சம் தர விரும்பாத ராமசாமி, இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

பின்னர் போலீசாரின் ஆலோசனையின்படி கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி துத்திக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் ரசாயன பவுடர் தடவிய, ரூ.500-ஐ சர்வேயர் சம்பத்குமாரிடம், ராமசாமி வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பத்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு, நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி குற்றம் சாட்டப்பட்ட சர்வேயர் சம்பத்குமாருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பத்குமார் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

Next Story