கோவில்பட்டி உதவி கலெக்டரிடம் தீப்பெட்டி தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு


கோவில்பட்டி உதவி கலெக்டரிடம் தீப்பெட்டி தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 17 Feb 2018 2:30 AM IST (Updated: 17 Feb 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உதவி கலெக்டர் அனிதாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

கோவில்பட்டி,

ஏ.ஐ.டி.யு.சி. தீப்பெட்டி தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் சரோஜா, செயலாளர் பரமராஜ், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், தாலுகா செயலாளர் பாபு, துணை செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உதவி கலெக்டர் அனிதாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில் கூறிஇருப்பதாவது:-

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் பஞ்சப்படி எவ்வளவு வழங்க வேண்டும் என்று கடந்த 24-4-2013 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தற்போது தீக்குச்சி அடைப்பு பிரிவில் நடைமுறையில் ஒரு வில்லைக்கு 11 ரூபாய் 35 காசு பஞ்சப்படி சேர்த்து, கடந்த 1-4-2017 முதல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு தொழிலாளிக்கு இதுவரை சுமார் ரூ.37 ஆயிரம் பாக்கியாக கொடுக்கப்பட வேண்டி உள்ளது. ஆனால் தொழிலாளர்களோ, தொழிற்சங்கமோ அவ்வாறு கேட்கவில்லை. ஒரு நியாயமான கூலி உயர்வே கேட்கிறோம். மேலும் சட்டப்படி தர வேண்டிய இ.எஸ்.ஐ., பி.எப்., கேன்டீன் வசதி போன்ற சலுகைகள் வழங்கப்படாமலே உள்ளன. தீப்பெட்டி தொழிலை நம்பியுள்ள ஏழை பெண் தொழிலாளர்களுக்காக போராட்டத்தை தொடர உறுதி ஏற்றுள்ளோம். எனவே தீப்பெட்டி தொழிலாளர்களின் நியாயமான சட்டப்படியான கோரிக்கைகளுக்கான தொடர் போராட்டங்களுக்கு அரசு அதிகாரிகள் ஆதரவு தர கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story