தாராபுரத்தில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர்: பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


தாராபுரத்தில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர்: பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 17 Feb 2018 4:15 AM IST (Updated: 17 Feb 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தாராபுரம்

தாராபுரம் சி.பி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு 25 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் திருடும் நோக்கில் வந்துள்ளார். அப்போது அந்த வாலிபரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ராமசாமி, “திருடன் திருடன்” கூச்சல் போட்டார். உடனே அந்த வாலிபர் ராமசாமியை பிடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த வாலிபரை துரத்திச்சென்றனர். அதற்குள் அவர் எங்கோ சென்றுமறைந்து கொண்டார்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்த தண்ணீர் தொட்டி அருகே அந்த வாலிபர் மறைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். உடனே அந்த வாலிபர் பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவரால் ஓட முடியவில்லை.

ஏற்கனவே அவர் மதுபோதையில் இருந்ததால் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் மூலனூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் கணேஷ் (வயது 28) என்பதும், சி.பி.கார்டன் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது. கணேசுக்கு காயம் ஏற்பட்டிருந்தால், போலீசார் அவரை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வாலிபர் கணேஷ் ஏற்கனவே 2 முறை சி.பி.கார்டன் குடியிருப்புக்குள் புகுந்து திருட முயன்றதும், தற்போது 3-வது முறையாக வீடு புகுந்து திருட முயற்சித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. 

Next Story