பொதுமக்கள் புகார்களை கனிவுடன் அணுக வேண்டும் போலீசார் குறைதீர்ப்பு முகாமில் டி.ஜி.பி. வலியுறுத்தல்

பொதுமக்கள் புகார்களை கனிவுடன் அணுக வேண்டும் என்று போலீசார் குறை தீர்ப்பு முகாமில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பேசினார்.
சென்னை,
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போலீசாருக்கான குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனிடம் பணி இடமாறுதல், தண்டனை குறைப்பு, காவலர் குடியிருப்பு, ஊதிய முரண்பாடு, வாரிசு வேலை போன்றவை தொடர்பாக 1,500 போலீசார் மனு அளித்தனர்.
அப்போது சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர்கள் சேஷசாயி, ஜெயராம், அருண், கணேசமூர்த்தி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முகாமில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பேசியதாவது:–
பணி மாறுதல்
பணிமாறுதல் அதிகம் பேருக்கு வழங்கி விட்டால் சென்னை போலீஸ் கமிஷனருக்கு கஷ்டம் ஆகி விடும். எப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, ரோந்து பணிக்கு என்ன செய்வது? போன்ற பிரச்சினைகள் இருக்கிறது. எனவே மீதம் உள்ளவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்து, மீண்டும் வாய்ப்பு வரும்போது முன்னூரிமை அடிப்படையில் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தற்போது 3 ஆயிரம் போலீசார் பயிற்சி பெற்று வருகிறார்கள். 3 மாதங்கள் கழித்து அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார் கள். அப்போது தேவைக்கு ஏற்ப பணிமாறுதல் வழங்கப்படும்.
குறை தீர்ப்பு முகாமில்
50 சதவீதம் பேர் இடம் மாறுதலுக்கும், 30 சதவீதம் பேர் தண்டனை குறைப்புக்கும், 15 சதவீதம் பேர் சம்பள உயர்வு, பதவி உயர்வு, வீடு ஒதுக்கீடு ஆகியவற்றிற்காக மனு அளித்துள்ளனர்.
கனிவுடன்...
பணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக 2 ஆயிரத்து 88 போலீசார் மீது பணி இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 50 சதவீதம் பேரின் தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது. 50 சதவீதம் பேரின் தண்டனை குறைக்கப்பட்டு உள்ளது. 140 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதில் 67 பேரின் பணிநீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. 22 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. உங்களுடைய (போலீசார்) கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் அளித்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைப்பது போல, போலீஸ்நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களுடைய புகார் களை நீங்கள் கனிவுடன் கேட்டறிந்து குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசும்போது, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் போலீசாரின் குறைகள் தீர்க்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story