பொதுநூலகத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பொதுநூலகத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2018 4:15 AM IST (Updated: 18 Feb 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி பொதுநூலகத்துறை அலுவலர் சங்கத்தினர் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் முனிராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் பொதுச்செயலாளர் சரவணன், நிர்வாகி அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், அரசு ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் புகழேந்தி, யோகராஜ், அங்கம்மாள், நெடுஞ்செழியன், பொது நூலகத்துறை அலுவலர் சங்க தலைவர் செல்வம், மாநில தலைவர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், நூலகர்களிடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். அனைத்து நூலகர்களுக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊர்ப்புற நூலகர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி கொண்ட நூலகங்களை கண்டறிந்து அவற்றை தரம் உயர்த்த வேண்டும். பகுதி நேர நூலகர்கள், பகுதிநேர கூட்டுனர்களுக்கு இடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

நிலுவையில் உள்ள நூலகர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நூலகர்கள், பகுதிநேர நூலகர்கள், நூலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story