எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது


எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 22 Feb 2018 4:30 AM IST (Updated: 22 Feb 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

இரும்பு கம்பத்தில் மோதி எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரியில் இருந்த 2 டிரைவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.

பூந்தமல்லி,

கடலூரைச்சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 24). டேங்கர் லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் ஐதராபாத்தில் இருந்து டேங்கர் லாரியில் சுமார் 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட எல்.டி.ஓ. எனப்படும் ஒருவித எண்ணெய்யை (இது தனியார் தொழிற்சாலைகளில் பொருட்களை எரிக்க பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது) ஏற்றிக்கொண்டு காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருடன் மாற்று டிரைவரான செல்லவேலு(42) என்பவரும் உடன் வந்தார்.

நள்ளிரவு 12 மணிஅளவில் மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் நசரத்பேட்டை அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த மற்றொரு லாரி, டேங்கர் லாரியின் இடதுபுறம் உரசுவதுபோல் கடந்துச் சென்றது.

இதனால் பயந்துபோன டிரைவர் கார்த்திகேயன், டேங்கர் லாரியை வலது புறமாக திருப்பினார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, தாறுமாறாக ஓடி, சாலையோரம் உள்ள வழிகாட்டி பெயர் பலகை அமைந்துள்ள ராட்சத இரும்பு கம்பம் மீது மோதியது. இதில் டேங்கர் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. லாரியின் முன்பகுதியும் நசுங்கியது.

இதில் டிரைவர்கள் கார்த்திகேயன், செல்லவேலு இருவரும் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் டேங்கர் லாரியில் இருந்து கீழே இறங்கினார்கள். லாரி மோதியதில் சேதம் அடைந்த வழிகாட்டி பலகை இரும்பு கம்பம் டேங்கர் லாரி மீது விழுந்தது.

டேங்கர் லாரி மீது இரும்பு கம்பம் விழுந்த வேகத்தில் தீப்பொறிகள் பறந்தன. இதனால் டேங்கர் லாரி தீப்பிடித்து எரியத்தொடங்கியது. எண்ணெய் என்பதால் டேங்கர் லாரி முழுவதும் தீ பரவி, கொழுந்து விட்டு எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள், டேங்கர் லாரியில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். டேங்கரில் எண்ணெய் இருந்ததால் அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று கருதி தீயணைப்பு வீரர்கள், சிறிது தூரம் தள்ளி நின்றே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் லாரியில் இருந்த எண்ணெய் எரிந்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதையடுத்து சென்னை எழும்பூரில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரசாயன கலவையை லாரி மீது பீய்ச்சி அடித்தனர்.

சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு டேங்கர் லாரியில் எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் டேங்கர் லாரி மற்றும் அதில் இருந்த எண்ணெய் முற்றிலும் எரிந்து நாசமானது. லாரி எலும்புக் கூடாக காட்சி அளித்தது.

நள்ளிரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாலும், வழிகாட்டி பலகை இரும்பு கம்பம் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்ததாலும் அந்த வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. வழிகாட்டி பலகையின் மற்றொரு பகுதியை வெட்டி எடுத்த பிறகு அந்த சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் காயம் அடைந்த லாரி டிரைவர்கள் இருவரும் பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story