மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் கவர்னர், முதல்- அமைச்சர் வரவேற்பு: அரவிந்தர் சமாதியில் பிரதமர் மோடி மரியாதை + "||" + Prime Minister Modi honored at Aravindar Samadhi

விமான நிலையத்தில் கவர்னர், முதல்- அமைச்சர் வரவேற்பு: அரவிந்தர் சமாதியில் பிரதமர் மோடி மரியாதை

விமான நிலையத்தில் கவர்னர், முதல்- அமைச்சர் வரவேற்பு: அரவிந்தர் சமாதியில் பிரதமர் மோடி மரியாதை
புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடியை கவர்னர் கிரண்பெடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டு சமாதியில் மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்னை வந்தார். அங்கு அம்மா ஸ்கூட்டர் திட்டம் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இதன்பின் சென்னையில் அவர் தங்கினார்.


புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான சர்வதேச நகரான ஆரோவில் உதயமாகி 50 ஆண்டுகள் ஆனதையொட்டி இதன் பொன்விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை விமான நிலையத்திற்கு நேற்று காலை 10.10 மணிக்கு பிரதமர் மோடி வந்து சேர்ந்தார்.

அங்கு அவரை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவருமான ரங்கசாமி, எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி.சுனில்குமார் கவுதம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதில் அரசு கொறடா அனந்தராமன், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எம்.என்.ஆர்.பாலன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, தனவேலு, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ.ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், சுகுமாறன், அசோக் ஆனந்த், திருமுருகன், கோபிகா, சந்திரபிரியங்கா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, கீதா ஆனந்தன், பா.ஜனதாவின் நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து குண்டு துளைக்காத காரில் பலத்த பாதுகாப்புடன் புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கு மோடி புறப்பட்டார். விமான நிலையத்தில் இருந்து லாஸ்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை, சிவாஜி சிலை, ஏழை மாரியம்மன் கோவில், மகாத்மா காந்தி வீதி, அஜந்தா சிக்னல், எஸ்.வி.படேல் சாலை, கடற்கரை சாலை, மரேன் வீதி வழியாக புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்தார்.

அங்கு அரவிந்தர் ஆசிரம நிர்வாகிகள் பிரதமர் மோடியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதன்பின் ஆசிரமத்திற்குள் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அரவிந்தர், அன்னை மீராவின் சமாதிகளில் மலர்தூவி அவர் மரியாதை செலுத்தினார். இதன்பின் அரவிந்தர் பயன்படுத்திய அறையை அவர் பார்வையிட்டார். பின்னர் அங்கு சுமார் 20 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து பகல் 11 மணிக்கு பிரதமர் மோடி வெளியே வந்தார். அதன் அருகே உள்ள ஆசிரமத்திற்கு சொந்தமான பள்ளிக்கு அவர் சென்றார். அங்கு பள்ளி மாணவ-மாணவிகள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். இதன்பின் பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இறைவாழ்த்து பாடினார்கள்.

மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறை குறித்து ஆசிரியர்களிடம் மோடி கேட்டறிந்தார். அங்கிருந்த மாணவ -மாணவிகள் புல்லாங்குழல் வாசித்து காண்பித்தனர். பின்னர் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது.

இதன்பின் ஆசிரம பள்ளியில் இருந்து பகல் 11.20 மணிக்கு ஆரோவிலுக்கு மோடி புறப்பட்டார். ஏற்கனவே புதுவைக்கு வந்த அதே பாதையில் மீண்டும் அவர் கார் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.35 மணியளவில் சர்வதேச நகரான ஆரோவில்லுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு நடந்த பொன்விழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின் மதியம் 1.45 மணிக்கு லாஸ்பேட்டை மைதானத்துக்கு வந்தார். அங்கு மாநில பா.ஜ.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பிற்பகல் 2.50 மணியளவில் பேச்சை முடித்துக் கொண்டு விமான நிலையத்தில் கவர்னர் கிரண்பெடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆகியோரை சந்தித்துப் பேசி விட்டு 3.25 மணியளவில் பிரதமர் மோடி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.