கிங்சர்க்கிள் ரெயில்வே பாலத்தில் கன்டெய்னர் லாரி சிக்கியது


கிங்சர்க்கிள் ரெயில்வே பாலத்தில் கன்டெய்னர் லாரி சிக்கியது
x
தினத்தந்தி 7 March 2018 3:31 AM IST (Updated: 7 March 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

கிங்சர்க்கிள் ரெயில்வே பாலத்தில் கன்டெய்னர் லாரி சிக்கியதால், கிழக்கு விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மும்பை,

மும்பை செம்பூர் பகுதியில் இருந்து நேற்று அதிகாலை தாதர் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. இந்த லாரி 5 மணியளவில் கிங்சர்க்கிள் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள ரெயில்வே பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை.

இதற்கிடையே தகவல் அறிந்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பாலத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் காலை நேரம் என்பதால் அந்த சாலை வழியாக அதிகமான வாகனங்கள் தென்மும்பை நோக்கி சென்றன. பாலத்தில் லாரி சிக்கியிருந்ததால் மேற்கொண்டு வாகனங்கள் செல்ல முடியாமல் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

போக்குவரத்து போலீசார் பாலத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்தநிலையில் வெகு நேரத்துக்கு பிறகு பாலத்தின் அடியில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.

இந்த ரெயில்வே பாலத்தின் கீழ் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த ரெயில்வே பாலத்தில் கன்டெய்னர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் சிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story