மடத்துக்குளம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது


மடத்துக்குளம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 8 March 2018 3:30 AM IST (Updated: 8 March 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மடத்துக்குளம்,

மடத்துக்குளத்தை அடுத்த மைவாடி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் விவசாயி. இவருடைய மனைவி அம்சவேணி (வயது 55) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி மைவாடி பிரிவு பகுதியிலிருந்து தனது தோட்டத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திருமூர்த்திமலைக்கு வழிகேட்பதுபோல் அம்சவேணியின் கவனத்தை திசை திருப்பி அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து நடராஜன் மடத்துக்குளம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து நகையை பறித்து சென்ற குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கில் கோவை அம்மன்குளம் லட்சுமிமில் பகுதியை சேர்ந்த முரளிதரன் என்பவரது மகன் சுபாஷ் (24) என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 பவுன் சங்கிலியை கைப்பற்றினர். மேலும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மற்றொரு மர்ம ஆசாமியை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகணேஷ், தனிப்படை போலீசார் பஞ்சலிங்கம், லிங்கேஸ்வரன், முதல் நிலைக்காவலர் முத்துமாணிக்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தனர். அவரிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற அய்யப்பன் (38) என்பது தெரியவந்தது.

மேலும் இவர் மீது அனுப்பர்பாளையம், வீரபாண்டி தெற்கு, பல்லடம், பெருமாநல்லூர், கோவை சாயிபாபா காலனி ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. 

Related Tags :
Next Story