தாரமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் நகைகளை அபேஸ் செய்த 10 பெண்கள்


தாரமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் நகைகளை அபேஸ் செய்த 10 பெண்கள்
x
தினத்தந்தி 9 March 2018 5:14 AM IST (Updated: 9 March 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் நகைகளை அபேஸ் செய்த 10 பெண்கள் சிக்கினர்.

தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே தெசவிளக்கு கிராமத்தில் படவெட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி நேற்று அலகுகுத்துதல், கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது சில பெண்கள் பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்த வேண்டும், மடிப்பிச்சை காணிக்கை போடுங்கள் என்று பிச்சை எடுத்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பெண்கள் சாமிகும்பிட வந்த தாரமங்கலம் அருகே உள்ள உப்பாரப்பட்டியை சேர்ந்த பழனி என்பவரது மனைவி கோவிந்தம்மாளின் (வயது 50) 5 பவுன் நகை, தாரமங்கலம் 5-வது வார்டு கோவிந்தன் என்பவரின் மனைவி மணியிடம்(25) 2 பவுன் நகை, கொத்தான்வளவு பகுதியை சேர்ந்த குழந்தையப்பன் என்பவரின் மனைவி மாரியம்மாளிடம்(70) 3 பவுன் நகை, தொப்பப்பட்டியை சேர்ந்த படவெட்டி என்பவரின் மனைவி கமலாவிடம் (60) 3 பவுன் நகை என மொத்தம் 13 பவுன் நகைகளை அபேஸ் செய்தனர். இதில் கமலாவிடம் நகையை அபேஸ் செய்த போது அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து, திருடி....திருடி...என்று கூச்சல் போட்டனர். இதையடுத்து பக்தர்கள் கூட்டத்தில் இருந்து ஆங்காங்கே 10 பெண்கள் வெளியில் ஓட்டம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த 10 பெண்களையும் பொதுமக்கள் ஓடஓட விரட்டி கையும்களவுமாக மடக்கிபிடித்தனர். பின்னர் அந்த 10 பெண்களையும் பொதுமக்கள் தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். இதில் 3 பெண்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர். பிடிபட்ட 10 பெண்களிடமும் தாரமங்கலம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகைகளை அபேஸ் செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

Next Story