மாவட்ட செய்திகள்

கடலூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமித்து கட்டப்பட்ட 16 வீடுகள் அகற்றம் + "||" + Work on road construction to avoid traffic congestion in Cuddalore

கடலூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமித்து கட்டப்பட்ட 16 வீடுகள் அகற்றம்

கடலூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமித்து கட்டப்பட்ட 16 வீடுகள் அகற்றம்
நத்தவெளிரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 16 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
கடலூர்,

கடலூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை அமைக்கும் பணியையொட்டி நத்தவெளிரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 16 வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சரவணாநகர்- நத்தவெளி ரோட்டை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்றது. ஆனால் சுமார் 60 அடி அகலம் கொண்ட நத்தவெளி ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்ததால், பணிகளை விரைந்து முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.


இதையடுத்து, ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பவர்களை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது. மேலும் ஆக்கிரமித்து வீடு கட்டி இருந்த 167 குடும்பங்களுக்கும் காரைக்காட்டில் மாற்று இடம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நத்தவெளி ரோட்டில் உள்ள பெரும்பாலான வீடுகளை பொதுமக்களே முன்வந்து காலி செய்தனர்.

இதையடுத்து அந்த வீடுகளை இடித்து அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக பொக்லைன் எந்திரத்துடன் நத்தவெளிரோட்டுக்கு நேற்று காலையில் வந்த அதிகாரிகள் அந்த வீடுகளை இடித்து தள்ளினார்கள். நேற்று மாலை வரை 16 வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. வீடுகள் இடிக்கப்பட்டதும் மற்ற வீடுகளில் உள்ளவர்களும் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களை காலி செய்ய தொடங்கினர்.

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணியை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் சிவா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகள் இன்றும் (வெள்ளிக்கிழமை) அகற்றும் பணி நடக்கிறது. ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தை முறையாக போக்குவரத்துக்கு பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த இடத்தை கடைக்காரர்கள் ஆக்கிரமிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினார்கள்.

இது பற்றி நத்தவெளி ரோட்டில் வசிக்கும் வசந்தா கூறியதாவது:-
இங்கு நாங்கள் 60 ஆண்டுகளாக வசிக்கிறோம். இப்பகுதியில் வசிக்கிறவர்கள் அனைவரும் கூலி வேலைக்கு தான் செல்கிறோம். நான் ஒரு வீட்டில் சமையல் வேலைக்கு செல்கிறேன். அதேப்போல் முதியவர்களை பராமரிக்கும் வேலை, கட்டிட வேலை போன்றவற்றுக்கும் செல்கிறோம்.

எங்களுக்கு காரைக்காட்டில் வீட்டுமனை தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக நாளை(சனிக்கிழமை) ‘டோக்கன்’ கொடுக்கிறார்களாம். டோக்கன் வாங்கி விட்டு வீடுகளை காலி செய்து விட்டு செல்லுமாறு கூறி உள்ளனர். காரைக்காட்டில் கம்பெனி இருப்பதால் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இல்லையென்றால் இங்கே வந்து வீட்டு வேலை செய்து விட்டு தான் போகணும், காரைக்காட்டில் இருந்து இங்கே வந்து செல்ல ஒரு நாளுக்கு 80 ரூபாய் ஆகும். இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. இவ்வாறு வசந்தா கூறினார்.

நத்தவெளி ரோடு சங்கர் கூறியதாவது:-
பல ஆண்டுகளாக இந்த பகுதியில் குடியிருந்து வருகிறோம். ஆனால் திடீரென எங்களை காலி செய்ய சொல்லி விட்டார்கள். இங்கு வசிக்கும் அனைவரும் கூலி வேலைக்கு தான் சென்று வருகிறார்கள். மாற்று இடத்தை வழங்கினாலும் அங்கு எங்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை. நாங்கள் வசித்த இடத்தில் ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் கழிப்பறை கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

அதன்படி நாங்கள் 10 பைசா வட்டிக்கு பணம் வாங்கி வீடுகளில் கழிப்பறை கட்டினோம். அதனை புகைப்படம் எடுத்து நகராட்சி அலுவலகத்தில் கொடுத்தோம். ஆனால் 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை மானியத்தொகை வழங்கப்படவில்லை. தற்போது நாங்கள் நத்தவெளி ரோட்டில் இருந்து காரைக்காடுக்கு செல்ல இருக்கிறோம். அதனால் அந்த மானியம் எங்களுக்கு கிடைக்குமா? என்று தெரிய வில்லை. இவ்வாறு சங்கர் கூறினார்.