கலையோடு வாழும் நிலையான வாழ்க்கை


கலையோடு வாழும் நிலையான வாழ்க்கை
x
தினத்தந்தி 11 March 2018 12:53 PM IST (Updated: 11 March 2018 12:53 PM IST)
t-max-icont-min-icon

பரதநாட்டிய கலைஞர், பாடகர், நாட்டிய இயக்குனர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் என பன்முக கலை வடிவம் கொண்டவர் வித்யா பவானி சுரேஷ்.

ரதநாட்டிய கலைஞர், பாடகர், நாட்டிய இயக்குனர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் என பன்முக கலை வடிவம் கொண்டவர் வித்யா பவானி சுரேஷ். தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புற கலைகள் மீதும் நாட்டம் மிகுந்தவர். பரதநாட்டியத்தில் இலக்கிய படைப்புகளை புகுத்தி மாறுபட்ட கண்ணோட்டத்தில் மேடை நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் வல்லமை பெற்றவர். இவருடைய கலை ஆர்வம் கலாசாரத்தின் பிரதிபலிப்பாகவும், மற்றவர்களும் கலை சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் திறவுகோலாகவும் அமைந்திருக்கிறது. தான் கற்ற கலைகள் மட்டுமின்றி பிற கலைகளை பற்றியும் ஆராய்ச்சி செய்து புத்தகங்களும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

48 வயதாகும் வித்யா பவானி சுரேஷ் சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர். இவருடைய பூர்வீகம் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு. ஐந்தரை வயது வரை பெற்றோரின் பணி நிமித்தமாக மத்தியபிரதேசத்திலுள்ள போபாலில் வசித்து வந்திருக்கிறார். அங்கு தந்தையின் எதிர்பாராத இழப்பு குடும்பத்தை நிலைகுலைய செய்திருக்கிறது. அந்த துயர சம்பவத்தை சொல்லும்போது வித்யாவிடம் வேதனைகள் வார்த்தைகளாக வெளிப்படுகின்றன.

‘‘நான் என் பெற்றோருக்கு ஒரே குழந்தை. என் தந்தை தாணு மூர்த்தி மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள உரத்தொழிற்சாலையிலும், தாயார் விஜயலட்சுமி அங்குள்ள அகில இந்திய வானொலி நிலையத்திலும் வேலை பார்த்து வந்தார்கள். அங்குதான் என் மழலை பருவம் மகிழ்ச்சியாக கழிந்து கொண்டிருந்தது. 1975-ம் ஆண்டு என் தந்தை வேலை விஷயமாக ரெயிலில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அருகில் இருந்த பெட்டியில் கொள்ளையர்கள் புகுந்து பெண் களிடம் நகை, பணத்தை கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். அவர்களது அலறல் சத்தத்தை கேட்டு உதவுவதற்காக ஓடி சென்ற என் தந்தையை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கிவிட்டார்கள். படுகாயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை மரணம் தழுவிக்கொண்டது.

அப்போது எனக்கு வயது ஐந்தரை. அம்மாவிற்கு 36. ஈடுகட்ட இயலாத இழப்பை சந்தித்து தனிமையில் துவண்டு போன என் தாயார், என் வாழ்க்கைக்காக சோகங்களை சுமந்துகொண்டு மனதை திடப் படுத்திக்கொண்டார். சென்னைக்கு மாற்றலாகி வந்து என் நலன் மீது கவனம் செலுத்தினார். அவருக்கு பரதநாட்டியம் மீது அலாதி பிரியமுண்டு. சிறுவயதில் அவருக்கு அதனை கற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் என் மூலம் அவருடைய எண்ணங்களை நிறைவேற்றிக்கொண்டார். எனக்காக வாழ்ந்தவருக்காக, அவருடைய விருப்பங்களுக்கு செவி சாய்த்தேன். அதில் எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டதால் பரதநாட்டியத்தை முறைப்படி கற்று அரங்கேற்றம் நிகழ்த்தினேன்’’ என்கிறார்.

மகள் பரதநாட்டியத்தில் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்பது விஜயலட்சுமியின் விருப்பமாக இருந்திருக்கிறது. வித்யா பவானியிடமும் தன்னுடைய கலைப் படைப்புகள் தனித்துவமாக தெரிய வேண்டும் என்ற உந்துதல் உருவாகி இருக்கிறது. அதை அப்படியே தனது படைப்புகளில் வெளிப்படுத்தினார்.

‘‘தமிழ் இலக்கியங்களை என் அம்மா விரும்பி படிப்பார். பள்ளிகளில் நடக்கும் இலக்கிய போட்டி களுக்கு தேவையான தகவல்களை எனக்கு திரட்டி கொடுப்பார். அதனால் சிறுவயதிலேயே எனக்கு தேவாரம், திவ்யபிரபந்தம் போன்றவைகளில் அதிக ஈடுபாடு உருவாகிவிட்டது. இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை ஆழமாக படித்து அவற்றின் அர்த்தங்களை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினேன். அதற்கு என் தாயாரின் தூண்டுதலும் வழிகாட்டியது.

பரத நாட்டியம், பார்ப்பவர் களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கவேண்டும் என்பதற்காக இலக்கிய படைப்புகளை மேற்கோள்காட்டுவதற்கு தீர்மானித்தோம். திருமுறுகாற்றுப்படை, பரிபாடல், திருப்புகழ், நளவெண்பா, திருவேங்கை கலம்பகம், மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் போன்றவற்றிலுள்ள பாடல்களையும், அதில் உள்ளடங்கி இருக்கும் கருத்துக்களையும் பரதநாட்டிய வடிவில் கொண்டு வந்தோம். அதுபோல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட சங்க இலக்கிய படைப்புகளுக்கும் இசை அமைத்து நாட்டிய நிகழ்வுகளை அரங்கேற்றி இருக்கிறேன். ஒவ்வொரு தமிழ் இலக்கிய பாடல்களையும் நாட்டியத்தில் கொண்டு வருவதற்கு முன்பு அதன் கருத்துக்களை தமிழில் விளக்கி கூறுவேன். பரதநாட்டியத்தை பார்ப்பவர்கள் தமிழ் இலக்கியங்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டார்கள்’’ என்று பூரிப்புடன் சொல்கிறார்.

தாயாரின் பணியை சுற்றியே வித்யா பவானியின் வாழ்க்கைப் பயணம் சுழல, செல்லும் இடங்களில் கிடைத்த வாய்ப்புகளை தன் கலை ஆர்வ தேடலுக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். நாட்டுப்புற கலைகள் பற்றி படித்த முதுகலைப்படிப்புதான் தன்னை சிறந்த கலைஞராக உருமாற்றி இருப்பதாக சொல்கிறார்.

‘‘பரதநாட்டிய கலைஞராக இருப்பதால் அனைத்து கலை வடிவங்களை பற்றியும் அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டினேன். நாட்டார் வழக்காற்றியல் எனும் நாட்டுப்புற கலை சார்ந்த கலைகளை பற்றியும், கலாசாரத்தை பற்றியும் விரிவாகவும், ஆழமாகவும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையிலுள்ள சேவியர் கல்லூரியில் அத்தகைய அரிய படிப்பு இருப்பதாக கேள்விப்பட்டேன். அந்த சமயத்தில் எனது தாயார் திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குனராக இருந்தார். நான் அப்போது ‘கம்பெனி செக்ரக்டரிஷிப்’ படித்துக் கொண்டிருந்தேன். நிறுவனங்களின் சட்டம் சார்ந்த விஷயங்களை நிர்வகிக்கும் கடினமான படிப்பு அது.

நானும் அம்மாவுடன் திருநெல்வேலியில் தங்கி இருந்ததால் நாட்டுப்புற கலைகளை பற்றி படிப்பதற்காக எனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை விட்டுவிட மனம் வரவில்லை. என் அம்மாவோ, ‘ஏற்கனவே நீ படிப்பது கடினமான படிப்பு. ஒரே நேரத்தில் உன்னால் எப்படி இரண்டு துறைகளில் கற்க முடியும்? சமாளிப்பதற்கு சிரமமாக இருக்கும்’ என்றார். கலைகள் மீது இருந்த ஈடுபாட்டில் சேவியர் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். அந்த இரண்டாண்டு படிப்பில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். நாட்டுப்புற கலைகளை மேலோட்டமாக அறிந்திருந்த எனக்கு அடிநாதம் வரை கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் உருவானது. கலைகள் மீதான எனது தேடலையும், சிந்தனையையும் விசாலப்படுத்தியது. ஒவ்வொரு கலையை பற்றியும் விலாவாரியாக அலசி ஆராய முடிந்தது.

வெளிநாட்டில் இருந்தும் நிறைய பேர் அங்கு வந்து நாட்டுப்புற கலைகளை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். அவர்கள் காட்டிய ஆர்வம் எனக்குள் புத்துணர்வை ஏற்படுத்தியது. அவர்களுடன் சேர்ந்தும், அங்கிருந்த நூலகங்கள் வழியாகவும் ஏராளமான கலை சார்ந்த விஷயங்களை அறிந்து கொண்டேன். நாட்டுப்புற கலைகளில் குறிப்பிடத்தக்கதான கணியான் கூத்து குறித்து இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தேன். கோவில்களில் அவர்கள் ஆடுவதை என்னை மறந்து விடியவிடிய அமர்ந்திருந்து ரசித்துப் பார்த்திருக்கிறேன். மற்ற கலைகளை பற்றி தெரிந்து கொள்ள முயல்வது நம்மை சிறந்த கலைஞராக உருவாக்கும்’’ என்கிறவர், பல்வேறு வகையான கலைகளை பற்றி விரிவாக தொகுத்து 39 புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

பரதநாட்டியம், கர்நாடக இசை, குச்சிப்புடி நடனம் ஆகியவை மட்டுமே வித்யா பவானி முறைப்படி கற்றுக்கொண்டவை. எனினும் பிற கலைகளை அறிந்து கொள்வதற்கு காட்டிய ஈடுபாடு காரணமாக மோகினி ஆட்டம், கூடி ஆட்டம், ஒடிசி, கதகளி உள்பட பல்வேறு கலைகளை பற்றி விளக்கமாக புத்தகங்களில் பதிவு செய்திருக்கிறார்.

‘‘கலைகளை பற்றி ஒவ்வொருவருக்கும் பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் முளைக்கும். அதற்கு விடை கொடுக்கும் நோக்கத்தில் என் எழுத்து பணி அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் என்னுடைய படிப்புக்கும், நான் கற்றுக்கொண்ட கலைகளுக்கும் சம்பந்தம் இல்லாமல்தான் இருந்தது. பி.எஸ்சி. வேதியியல் படித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக ‘கம்பெனி செக்ரக்டரிஷிப்’ படித்தேன். அந்த படிப்பு கடினமானது என்றாலும் நல்ல வேலையை தேடித்தந்தது. பணிபுரிந்த இடத்தில் நல்ல பெயரையும் பெற்றுக்கொடுத்தது.

என் கணவர் சுரேஷ் என்னை போலவே கலைகள் மீது ஆர்வம் கொண்டவர். நான் வேலை பார்த்து வந்தாலும் கலைகள் மீதான மோகம் என்னை விட்டு விலகவில்லை. பணி முடிந்ததும் பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று நான் கற்றறிந்த கலைகளை பற்றி சொற்பொழிவாற்றி வந்தேன். பார்வையாளர்கள் கேட்கும் எல்லா சந்தேகங்களுக்கும் என்னால் பதிலளிக்க முடிந்தது. அதை பார்த்த என் கணவர் வேலையை விட்டுவிட்டு முழுநேரத்தையும் கலை சார்ந்த விஷயங்களுக்கே செலவிடுமாறு கேட்டுக்கொண்டார். அவருடைய ஆதரவும், ஒத்துழைப்பும்தான் என்னை கூர்தீட்டிக்கொள்ள வழிவகை செய்திருக்கிறது. என்னுடைய படைப்புகளை படிப்பவர்கள் அந்தந்த கலைகளை பற்றிய முழு விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். படைப்புகளின் இடையே சங்க இலக்கிய பாடல்களை மேற்கோள் காட்டியும் விவரிக்கிறேன். இலக்கியங்களும், கலைகளும் என் படைப்புகளில் இரண்டற கலந்திருக்க வழிவகை செய்திருக்கிறேன்’’ என்கிறார்.

வித்யா பவானி- சுரேஷ் தம்பதியரின் மூத்த மகள் மஹிதா சி.ஏ. படித்து வருகிறார். இரட்டையர்களான ஹர்ஷிதாவும், நிபுனும் 10-ம் வகுப்பு படிக்கிறார்கள்.

Next Story