கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வலியுறுத்தி சாலைமறியல்


கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வலியுறுத்தி சாலைமறியல்
x
தினத்தந்தி 16 March 2018 4:15 AM IST (Updated: 16 March 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

எலச்சிபாளையத்தில் பரபரப்பு கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்.

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் அகரம் மாரியம்மன்கோவில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 2 வாடகை கட்டிடங்கள் உள்ளது. அதில் ஒன்றில் முடிதிருத்தம் செய்யும் கடையும், மற்றொன்றில் டீக்கடையும் செயல்பட்டு வந்தது.

கோவிலுக்கு இட நெருக்கடியாக உள்ளதால் இந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பக்தர்களும் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை 10 மணியளவில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் இப்பகுதிக்கு வந்தனர். நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணிக்காக கோவிலுக்கு சொந்தமான இந்த 2 கட்டிடங்களையும் இடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இந்த கட்டிடங்களை இடிக்க கூடாது என இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சிவகாமி கூறினார். இதனால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். பின்னர் அவர்கள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள், சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்க பணிக்கு எவ்வளவு இடம் தேவைப்படுகிறதோ அந்த அளவிற்கு மட்டும் தற்போது இடிக்கப்படும் எனவும், பின்னர் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும், பொதுமக்களிடமும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து அந்த 2 கட்டிடங்களையும் முழுமையாக இடிக்காமல் சாலை விரிவாக்க பணிக்கு தேவையான அளவு மட்டும் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story