வடுகன் தோட்டம் கிராமத்தில் குடியிருப்பு அருகே முகாமிட்ட காட்டு யானைகள், வனத்துறையினர் விரட்டியப்பு


வடுகன் தோட்டம் கிராமத்தில் குடியிருப்பு அருகே முகாமிட்ட காட்டு யானைகள், வனத்துறையினர் விரட்டியப்பு
x
தினத்தந்தி 18 March 2018 3:30 AM IST (Updated: 18 March 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

வடுகன் தோட்டம் கிராமத்தில் குடியிருப்பு அருகே முகாமிட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

குன்னூர்,

குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி அவ்வப்போது காட்டுத்தீ ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக நல்ல மழை பெய்தது.

மழை காரணமாக வனப்பகுதிகளில் பசுமை திரும்பியது. இதையடுத்து கேரள வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த காட்டு யானைகள் தற்போது குன்னூர் பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு படையெடுக்க தொடங்கி உள்ளன.

குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் நேற்று காலை 2 குட்டிகளுடன் 4 காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. பின்னர் அந்த காட்டு யானைகள் அங்கிருந்து குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் வடுகன் தோட்டம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியையொட்டி உள்ள வனப்பகுதியில் முகாமிட்டன.

இதுபற்றி உடனடியாக கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர். சந்திப்பு 7-வது வளைவு பகுதிக்கு விரட்டியடித்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் குட்டியுடன் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் முகாமிட்டு உள்ளன. வனத்துறையினர் காட்டு யானைகளை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டு யானைகளை குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலைக்கு வராமல் தடுக்கும் முயற்சியில் குன்னூர் வனச்சரகர் பெரியசாமி தலைமையில் வனக்காவலர் பிரபாகரன், வேட்டை தடுப்பு காவலர்கள் பிரபு, லோகநாதன் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

Next Story