கந்துவட்டி பிரச்சினை: இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


கந்துவட்டி பிரச்சினை: இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 20 March 2018 4:30 AM IST (Updated: 20 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

கந்துவட்டி பிரச்சினையில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீரனூர்,

பழனியை அடுத்த புளியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் முத்தையா. அவருடைய மனைவி பாலம்மா (வயது 52). இவர்களுடைய மகள் குகமதி (35). அவருடைய கணவர் ராஜேந்திரன். கட்டிட தொழிலாளி. குகமதி கணவருடன் தனது தாய் வீட்டருகே வசிக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புளியம்பட்டியை சேர்ந்த ஒருவரிடம், முத்தையா வட்டிக்கு பணம் வாங்கியிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நோய் பாதிப்பால் இறந்து போனார். அவருடைய மனைவி பாலம்மா தொடர்ந்து கடன் தொகைக்கு வட்டி செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த நபர், பாலம்மாவை சந்தித்து கந்துவட்டி யுடன் கடன் தொகையை தரும்படி கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த குகமதி தாய்க்கு ஆதரவாக பேசினார். அப்போது ஆத்திரமடைந்த அந்த நபர், அரிவாளால் பாலம்மாவை வெட்ட முயன்றார். அப்போது குகமதி அவரை தடுக்கவே அவருடைய தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து பணம் கொடுத்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

படுகாயமடைந்த குகமதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் கந்துவட்டி கேட்டு புளியம்பட்டியை சேர்ந்த ஒரு நபர் கொடுமை செய்ததோடு, தனது மகளையும் அரிவாளால் வெட்டியதாக பாலம்மா கீரனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story