குளத்தில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி கிராம மக்கள் மனு


குளத்தில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 20 March 2018 3:45 AM IST (Updated: 20 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே குளத்தில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும், துணை கலெக்டர் இந்திரவள்ளி, திட்ட இயக்குனர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

அப்போது திண்டுக்கல் சவுராஷ்டிராகாலனி கைத்தறி நெசவாளர்கள் கொடுத்த மனுவில், சுமார் 60 ஆண்டுகளாக வீட்டில் வைத்து சிறிய அளவில் நூலுக்கு சாயமேற்றும் தொழில் செய்து வருகிறோம். இதன் கழிவுநீரை சாக்கடை கால்வாயில் விடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. ஆனால், சாயமேற்றிய பின்னர் கழிவுநீரை சுத்திகரித்த பின்னரே வெளியேற்றுகிறோம். எனவே, எங்களுடைய தொழிலை பாதுகாக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

அதேபோல் வேடசந்தூர் தாலுகா வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், வடுகம்பாடி சங்கங்குளத்தில் கடந்த 40 நாட்களாக லாரிகளில் சிலர் மண் அள்ளி செல்கின்றனர். சுமார் 15 அடி ஆழம் வரை மண் எடுக்கப்பட்டு விட்டது. மழைக்காலத்தில் குளம் நிரம்பும் போது அதில் இறங்கும் மனிதர்கள், கால்நடைகள் பள்ளத்தில் சிக்கி இறக்கும் அபாயம் உள்ளது. எனவே, குளத்தில் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியினர் கொடுத்த மனுவில், நிலக்கோட்டை பேரூராட்சி 6-வது வார்டில் சாக்கடை கால்வாய்கள் முறையாக கட்டப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. கொங்கர்குளத்தில் கழிவுநீர் கலக்கிறது. மேலும் அங்கு திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டு இருப்பதால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 14-வது வார்டில் தெருவை ஆக்கிரமித்து கழிப்பறை தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

நத்தம் தாலுகா பண்ணுவார்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், பண்ணுவார்பட்டியில் தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள், ஏற்கனவே வாங்கிய பயனாளிகளுக்கே மீண்டும் வழங்கப்படுகின்றன. இதனால் தகுதியான பலர் கறவை மாடுகள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, தகுதியான நபர்களுக்கு கறவை மாடுகள் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நிலக்கோட்டை தாலுகா கோம்பைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதிய கட்டிடம், இருக்கை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் தரையில் அமரும் நிலை உள்ளது. மாணவர்களின் நலன்கருதி தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா கட்சியினர் மனு கொடுத்தனர். 

Next Story