தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தும் சாதனை: சென்னை என்ஜினீயரிங் மாணவர், ஆந்திர போலீஸ் ஏட்டு நிகழ்த்துகிறார்கள்


தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தும் சாதனை: சென்னை என்ஜினீயரிங் மாணவர், ஆந்திர போலீஸ் ஏட்டு நிகழ்த்துகிறார்கள்
x
தினத்தந்தி 24 March 2018 3:30 AM IST (Updated: 24 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை கடலில் நீந்தும் சாதனையை, சென்னை என்ஜினீயரிங் மாணவரும், ஆந்திர போலீஸ் ஏட்டும் நிகழ்த்த உள்ளனர்.

ராமேசுவரம்,

சென்னை முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரலிங்கம்-ஜெயலட்சுமி. இவர்களுடைய மகன் ராஜேசுவரபிரபு(வயது 20). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இறுதியாண்டு படித்து வருகிறார். நீச்சலில் ஆர்வமுள்ள இவர் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையுள்ள 32 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி கடக்க திட்டமிட்டிருந்தார்.

இதற்காக அரசின் உரிய அனுமதி பெற்று நேற்று காலை தன் தந்தை சுந்தரலிங்கம், தமிழ்நாடு நீச்சல் பயிற்சி கண்காணிப்பாளர் விஜயக்குமார் உள்பட 16 பேருடன் படகில் புறப்பட்டு தலைமன்னார் சென்றார். தலைமன்னாரில் இருந்து கடலில் நீச்சல் மேற்கொள்ளும் அவர், இன்று (சனிக் கிழமை) காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல ஆந்திர மாநில காவல்துறையை சேர்ந்த தலைமைக் காவலர் சைதன்யா (30), என்பவரும் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடப்பதற்கு அரசின் அனுமதி பெற்றுள்ளார். அவர் இன்று ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து தலைமன்னாருக்கு புறப்பட்டு செல்கிறார். நாளை அவர் அங்கிருந்து நீச்சல் அடித்து அரிச்சல்முனை கடற்கரைக்கு வர உள்ளார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குற்றாலீசுவரன் என்பவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story