காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி பாராளுமன்றம் முன்பு உண்ணாவிரதம் : பி.ஆர்.பாண்டியன்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி பாராளுமன்றம் முன்பு உண்ணாவிரதம் :  பி.ஆர்.பாண்டியன்
x
தினத்தந்தி 24 March 2018 4:45 AM IST (Updated: 24 March 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை வலியுறுத்தி பாராளுமன்றம் முன்பு 26-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தஞ்சையில் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி பாராளுமன்றம் முன்பு 26-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தஞ்சையில் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முடக்க வேண்டும் என்று மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் பேசியிருப்பது கோர்ட்டு அவமதிப்பாகும்.

கர்நாடகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் பா.ஜனதா அரசு ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளது. தமிழக எம்.பி.க்கள் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்காமல் அந்த போராட்டத்தையே தனக்கு சாதகமாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.

தனது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை இந்த தொடர் முடியும் வரை கொண்டு வர முடியாத அளவுக்கு எம்.பி.க்கள் போராட்டத்தை பா.ஜனதா பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. 8 கோடி மக்களின் பிரதிநிதிகளாகத்தான் அவர்கள் போராடி வருகின்றனர். அந்த போராட்டத்தை பிரதமர் மோடி, கேலிக்கூத்தாக்கி விட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகத்தில் தனது கை ஓங்க வேண்டும் என்று நினைக்கும் பிரதமர் மோடி, தமிழக எம்.பி.க்களின் போராட்டத்தை வைத்து தனது பதவியை தக்க வைத்து கொள்ளப் பார்க்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வருகிற 26-ந் தேதி முதல் டெல்லியில் பாராளுமன்றம் முன்பு தொடர் உண்ணா விரத போராட்டம் நடத்த உள்ளோம்.

இந்த போராட்டத்திற்கு ஒத்த கருத்துடைய அரசியல் கட்சியினரை அழைத்துள்ளோம். சிலர் தாமாக முன்வந்து போராட்டத்தில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்க நாளை(அதாவது இன்று) மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்று அங்கிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் டெல்லிக்கு செல்கிறோம்.

காவிரி பிரச்சினையில் புதுச்சேரி, கேரள மாநில முதல்-மந்திரிகளும், தமிழக முதல்-அமைச்சரும் ஒத்த கருத்துடன் இருக்கிறார்கள். ஒத்த கருத்துடைய முதல்-மந்திரிகளை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து பேச வேண்டிய பொறுப்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. எனவே அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, அண்ணாதுரை, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story