மொழிவாரி மாநிலங்களில் இந்தி- சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது மத்திய அரசு மீது சுப்புலட்சுமி ஜெகதீசன் குற்றச்சாட்டு

மொழிவாரி மாநிலங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது என்று ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டில் மத்திய அரசு மீது முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் குற்றம் சாட்டிப்பேசினார்.
ஈரோடு,
ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு பெருந்துறையை அடுத்த சரளையில் உள்ள அண்ணா நகர் பெரியார் திடலில் நேற்று தொடங்கியது.
மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர்தான் தமிழ்நாடு என்ற பெயர் வந்தது. இன்னும் நாம் மாநில சுயாட்சி தொடர்பாக தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தற்போதைய பிரதமர் மோடி மாநிலங்களுக்கு ஏற்கனவே இருக்கும் உரிமைகளையும், அதிகாரங்களையும் பறித்து வருகிறார். முதலில் கல்வியை கையில் எடுத்து இருக்கிறார். ‘நீட்’ என்ற பெயரில் இடஒதுக் கீட்டை அடியோடு பறித்து இருக்கிறார்.
உயர் மருத்துவப்படிப்பில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு என்பதை ரத்து செய்து இருக்கிறார். இதன் மூலம் மத்திய அரசு மனுதர்மத்தை கையில் எடுத்து இருக்கிறது. பல்வேறு மொழி, மதங்கள் கொண்ட இந்தியாவில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்ற கோஷத்தை முன்வைத்து இருக்கிறார் மோடி. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள். இந்தி தெரியாத மொழிவாரி மாநிலங்களுக்கும் இந்தி மொழியிலேயே மத்திய அரசின் அறிவிப்புகளை அனுப்புகிறார்கள். இதன் மூலம் இந்தி திணிக்கப்படுகிறது.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி போன்றவற்றை தான்தோன்றித்தனமாக, தட்டிக்கேட்க யாரும் இல்லை என்று தன்னிச்சையாக பிரதமர் மோடி கொண்டு வந்தார். இதனால் இன்று தொழில்கள் முடங்கி விட்டன. வேலை வாய்ப்பு இழப்பு அதிகரித்து உள்ளது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. விவசாயம் அழிந்து விட்டது. விவசாயிகள் என்ன தொழில் செய்வது என்று கூட தெரியாமல் துன்பப்பட்டு வருகிறார்கள். இதுமட்டுமின்றி திராவிட கட்சிகளை அழிப்போம் என்று நாசகார சக்திகள் தமிழகத்தில் ஊடுருவி உள்ளன. திராவிடத்தை அழிப்போம்.
பெரியார் சிலைகளை உடைப்போம். சிலைகள் இல்லாத நிலையை செய்வோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களைப்பார்த்து நாங்கள் கூறுவது என்னவென்றால், ஏமாளிகளே, நீங்கள் இதை செய்யும்போதுதான், தி.மு.க. ஒரு இரும்பு கோட்டை, இதை ஈக்களும், கரையான்களும், கட்டெறும்புகளும் எதுவும் செய்ய முடியாது என்ற நெஞ்சுறுதி கொள்கிறோம்.
இந்த சூழலில் நாம் சில புதிய கொள்கைகளை எடுத்தாக வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக, விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்காக, கணினி பொறியாளர்களுக்கு தனி கொள்கைகளை உருவாக்க வேண்டும். அதற்காகவே இந்த மாநாடு. இந்த மாநாட்டில் நாம் ஒரு சூளுரை ஏற்கவேண்டும். தமிழர்களின் தலைகுனிவை போக்க வேண்டும். இந்த மாநாடு சமூக நீதிகாக்கான ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story