கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 March 2018 5:00 AM IST (Updated: 27 March 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு அருகில் மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் வகையில் தொழிற்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு தூத்துக்குடி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை தூத்துக்குடி மக்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அ.குமரெட்டியாபுரம் கிராமமக்கள், தங்களது ஊரிலேயே தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டம் நேற்று 43-வது நாளாக நீடித்தது. இதில் கிராம மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 24-ந் தேதி தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதால் தூத்துக்குடியே ஸ்தம்பித்தது. இதையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி, ராஜா உள்ளிட்டோர் தலைமையில் அ.குமரெட்டியாபுரம் கிராமமக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது.

நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி மனித உயிர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் இந்த ஆலை விரிவாக்கத்தை மாவட்ட கலெக்டர் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். தவறான தகவல்களுடன் தாக்கல் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மோசடி அறிக்கையாகவே உள்ளது. இதன் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்களின் அமைதி வழி போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். அ.குமரெட்டியாபுரம் அமைதி வழி போராட்டத்துக்கு பந்தல் அமைக்க அனுமதி தர வேண்டும். போராட்டத்துக்கு ஆதரவுதர வருகை தருகிறவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஜனநாயகத்துக்கு எதிரான இதுபோன்ற மக்கள் விரோத செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி பகுதியில் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காற்று மாசு அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நோக்கம் ஸ்டெர்லைட் போன்ற ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகள் இருக்க கூடாது என்பதாகும். எனவே, ஸ்டெர்லைட் போன்ற தொழிற் சாலைகளை உடனடியாக மூட வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்து, தொழிற்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு தே.மு.தி.க.வினர் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து அவர்கள் கொடுத்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, ஆலை விரிவாக்கம் பணியை தடுத்து நிறுத்துவதுடன், ஆலையை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் நேற்று காலை ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கல்லூரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு கிளை செயலாளர் பிரவின் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசு மற்றும் பல்வேறு பாதிப்புகள் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. ஆகையால் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். கிராமமக்களுக்கு ஆதரவாக நேற்று கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story