கூட்டுறவு சங்க வேட்புமனு தாக்கல்: அ.தி.மு.க.-அ.ம.மு.க. மோதல், பொதுமக்கள் மறியல்


கூட்டுறவு சங்க வேட்புமனு தாக்கல்: அ.தி.மு.க.-அ.ம.மு.க. மோதல், பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 27 March 2018 4:00 AM IST (Updated: 27 March 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

கள்ளிக்குடி அருகே கூட்டுறவு சங்க வேட்புமனு தாக்கலின் போது அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. மேலூர் அருகே வேட்புமனுத்தாக்கலுக்கான ஒப்புகை சீட்டு வழங்க கோரி பொதுமக்கள், விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருமங்கலம்,

கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதில் அ.தி.மு.க. சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்ய கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் தலைமையில் 11 பேர் சென்றனர். அதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த (டி.டி.வி.தினகரன் அணி) ஒன்றிய செயலாளர் சஞ்சய்காந்தி, அரசபட்டி மாரி உள்பட 11 பேர் மனு தாக்கல் செய்ய சென்றனர்.

அப்போது அ.ம.மு.க. அணியினரின் மனுவை ஏற்று கொள்ளக் கூடாது என்று அ.தி.மு.க.வினர் கூறியதைத் தொடர்ந்து தள்ளு முள்ளு ஏற்பட்டு 2 அணியினரும் மோதி கொண்டனர். தகவலறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி னர். போட்டியிட வருபவர்களின் வேட்பு மனுக்களை பெற வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து, இருதரப்பு வேட்பு மனுக்களையும் அதிகாரி பெற்றுக்கொண்டார்.

மேலூர் அருகில் உள்ள வெள்ளலூரிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தேர்தல் அதிகாரி முத்துகுமாரசாமி தலைமையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதில் பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் என பலதரப்பட்டோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் கடந்த முறை நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலின் போது மனுதாக்கல் செய்த பலரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அந்த முறைகேடு சம்பவம் போன்று, இந்த முறை மனுதாக்கல் செய்தவர்களுக்கு ஏற்படக்கூடாது என்றும், மனுத்தாக்கல் செய்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என்றும் விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு ஒப்புகை சீட்டு வழங்குவதில்லை என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, கடந்த தேர்தல் போன்று இப்போது மீண்டும் முறை கேடு நடக்க வழிமுறைகள் எற்படுவதாக கூறி கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விவசாய சங்கத்தினர் ஒப்புகை சீட்டு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story