2 நாள் சுற்றுப்பயணமாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை


2 நாள் சுற்றுப்பயணமாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை
x
தினத்தந்தி 30 March 2018 3:00 AM IST (Updated: 30 March 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று(வெள்ளிக்கிழமை) கர்நாடகம் வருகிறார்.

பெங்களூரு,

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று(வெள்ளிக்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் மைசூரு உள்பட 4 மாவட்டங்களில் ஆதரவு திரட்டுகிறார்.

கலந்துரையாடல் நடத்துகிறார்

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், ராமநகர் ஆகிய 4 மாவட்டங்களில் ஆதரவு திரட்டுகிறார். இன்று காலை 9.20 மணிக்கு மைசூருவுக்கு வரும் அவர், சுத்தூர் மடத்திற்கு சென்று மடாதி பதியை நேரில் சந்தித்து ஆசி பெறுகிறார். அதைத் தொடர்ந்து மைசூரு மன்னர் வீட்டுக்கு சென்று மகாராணி பிரமோதாதேவியை சந்தித்து பேசுகிறார்.

அதன்பின்னர் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அமித்ஷா பேசுகிறார். அதையடுத்து ராஜேந்திரா கலாமந்திராவில் தலித் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு செல்கிறார். கொள்ளேகாலில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் அவர், அதன் பிறகு சாம்ராஜ்நகரில் நடைபெறும் பழங்குடியினர் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார்.

மேல்கோட்டை செலுவராயசாமி

அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நஞ்சன்கூட்டில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று அமித்ஷா, சாமி தரிசனம் செய்கிறார். மைசூருவில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்திற்கு செல்கிறார். அத்துடன் இன்றைய சுற்றுப்பயணம் நிறைவடைகிறது. அவர் இன்று இரவு மைசூருவில் தங்குகிறார். அதைத்தொடர்ந்து நாளை(சனிக்கிழமை) 2-வது நாள் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு மைசூரு ராஜேந்திர கலாமந்திராவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

மைசூருவில் பா.ஜனதா பிரசார வாகனங்களை தொடங்கி வைக்கிறார். மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி ராஜேந்திரப்பாவின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். மண்டியா மாவட்டம் மேல்கோட்டை செலுவராயசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

விவசாயிகளுடன் கலந்துரையாடல்

மண்டியாவில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். அதைத்தொடர்ந்து அவர்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறார். அங்கு 5 மாவட்ட கட்சி நிர்வாகிகள் பங்கு பெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் உள்ள கைவினை பொருட்கள் பூங்காவுக்கு சென்று பார்வையிடுகிறார். மாலை 5 மணிக்கு சென்னப்பட்டணாவில் பட்டு உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். அதை முடித்துக் கொண்டு அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இந்த தகவலை கர்நாடக மாநில பா.ஜனதா வெளியிட்டுள்ளது.

Next Story