பம்பை ஆற்றில் சுவாமி அய்யப்பனுக்கு ஆறாட்டு நடந்தது


பம்பை ஆற்றில் சுவாமி அய்யப்பனுக்கு ஆறாட்டு நடந்தது
x
தினத்தந்தி 31 March 2018 3:30 AM IST (Updated: 30 March 2018 11:32 PM IST)
t-max-icont-min-icon

பம்பை ஆற்றில் சுவாமி அய்யப்பனுக்கு ஆறாட்டு வைபவம் நேற்று நடந்தது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை,

பம்பை ஆற்றில் சுவாமி அய்யப்பனுக்கு ஆறாட்டு வைபவம் நேற்று நடந்தது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி நடந்த ஊர்வலத்தின் போது அய்யப்பன் சிலையை சுமந்து வந்த யானை மிரண்டு ஓடியதால் 10 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆறாட்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் கணபதி ஹோமம், பூதபலி, உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை, உற்சவ பலி பூஜை ஆகியவற்றுடன் சிறப்பு பூஜைகளான படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, நெய் அபிஷேகம், அய்யப்பன் எழுந்தருளல், சப்த கன்னியர்களுக்கு பிரசாதம் படைத்து, மகாமண்டபத்தில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன.

நேற்று முன்தினம் இரவில் சரம்குத்தியில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பள்ளி வேட்டை நடந்தது.பங்குனி உத்திர தினமான நே ற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக பம்பை ஆற்றில் சுவாமி அய்யப்பனுக்கு ஆறாட்டு வைபவம் நடந்தது.

இதையொட்டி சன்னிதானத்தில் இருந்து, காலை 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது சுவாமி அய்யப்பன் சிலையை வைத்து பம்பை ஆற்றை நோக்கி ஊர்வலம் தொடங்கியது. செண்டை மேளம் மற்றும் இசை வாத்தியங்கள் முழங்க இந்த ஊர்வலம் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது, அய்யப்பன் சிலையை சுமந்து சென்ற யானை திடீரென மிரண்டது. உடனடியாக யானை மீது இருந்த சிலை கீழே வாங்கப்பட்டது. யானை மீது அமர்ந்து வந்த பூசாரியும் கீழே இறக்கப்பட்டார். ஆனாலும் யானை மிரண்டு ஓடியதில் அந்த பூசாரி உள்பட 10 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது.

மிரண்டு ஓடிய யானை ஒரு பள்ளத்தில் விழுந்து பிளிறியது. பின்னர் அந்த யானை மீட்கப்பட்டு, அதற்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

சுவாமி அய்யப்பன் சிலையானது, சப்பரம் போன்று அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து, மீண்டும் ஊர்வலம் பம்பை ஆற்றை நோக்கி நடைபெற்றது.

பகல் 11.30 மணிக்கு பம்பை கணபதி கோவிலுக்கு வந்த ஆறாட்டு ஊர்வலத்திற்கு அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு சபரிமலை கோவில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி முன்னிலையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஆறாட்டு பலி பூஜைகளை நடத்தினார். சுவாமி அய்யப்பனின் ஆறாட்டு வைபவத்தை கண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், “சாமியே சரணம் அய்யப்பா“ என சரண கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.

பின்னர் பிற்பகல் 3 மணி வரை பம்பை கணபதி கோவிலில் சுவாமி அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மீண்டும் 3.10 மணி அளவில் பம்பையில் இருந்து ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து, சன்னிதானத்துக்கு கொண்டு சென்றனர்.

அதை தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆறாட்டு திருவிழாவின் நிறைவு நாள் என்பதால் நேற்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

சித்திரை விஷு பண்டிகைக்காக வருகிற 10-ந் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, வழக்கமான பூஜை- வழிபாடுகள் நடக்கின்றன. 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணி முதல் 7 மணி வரை விஷு கனி தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு விஷு கைநீட்டம் (நாணயம்) வழங்குகிறார்கள். தொடர்ந்து 18-ந் தேதி வரை சபரிமலையில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

சபரிமலை கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் அப்பச்சி மேடு அருகே வந்த போது, யானையின் காலானது, ஒரு கல்லில் தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வலி பொறுக்க முடியாமல் அந்த யானை மிரண்டு ஓடி அருகில் உள்ள சிறிய பள்ளத்தில் விழுந்தது.

இதில் யானையின் கால் நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டியது. இந்த களேபரத்தில்தான் யானை மீது இருந்த பூசாரி உள்பட 10 பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக பம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளத்தில் விழுந்த யானைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேளதாள ஓசை கேட்டு யானை மிரண்டு ஓடியதா? அல்லது காலில் காயம் ஏற்பட்டதால் மிரண்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story