நான் பா.ஜனதா கட்சியை விட்டு விலக மாட்டேன் சோமண்ணா எம்.எல்.சி. பேட்டி

நான் பாரா.ஜனதா கட்சியை விட்டு விலக மாட்டேன் என்று சோமண்ணா எம்.எல்.சி. கூறினார்.
பெங்களூரு,
பா.ஜனதா மூத்த தலைவர் சோமண்ணா எம்.எல்.சி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
‘‘எங்கள் கட்சி எங்கு சொல்கிறதோ அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன். டிக்கெட் இல்லை என்று கூறினாலும் கட்சிக்காக உழைக்க தயாராக இருக்கிறேன். எடியூரப்பா எங்கள் கட்சியின் தலைவர். மத்திய மந்திரி அனந்தகுமார் எனது தலைவர். அவர்கள் இருவரும் சொல்கிறபடி நான் நடந்துகொள்வேன். நான் கட்சியின் விசுவாசமிக்க தொண்டன். கடினமான காலத்தில் பா.ஜனதா எனக்கு அனைத்து பதவிகளையும் வழங்கியது.எனது சுயநலத்திற்காக நான் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும் என்பது எங்களின் ஆசை. கர்நாடகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை அகற்ற நாங்கள் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றுவோம். பெங்களூரு கோவிந்தராஜநகர் தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் வருகிற 8–ந் தேதி கலந்து ஆலோசனை நடத்துகிறேன்.
எனது மகனை எடியூரப்பா அழைத்து அரிசிகெரே தொகுதியில் கட்சி பணிகளை மேற்கொள்ளும்படி கூறினார். அதன்படி எனது மகன் கட்சி பணிகளை தொடங்கி நடத்தி வருகிறார். அந்த தொகுதிகளில் சில காரணங்களால் பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றை எடியூரப்பாவே தீர்த்து வைக்க வேண்டும். எனக்கும், எடியூரப்பாவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எடியூரப்பா முதல்–மந்திரி ஆக வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்.நான் பா.ஜனதாவை விட்டு விலக மாட்டேன். அவ்வாறு நான் யோசித்தது இல்லை. எனது அரசியல் எதிரிகள் மக்களிடையே தவறான தகவலை பரப்பி குழப்பங்களை விளைவிக்கிறார்கள். என்னால் பா.ஜனதாவுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையும் வந்துவிடக்கூடாது. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன்.
சித்தராமையா தனது அரசியல் ஆதாயத்திற்காக வீரசைவ–லிங்காயத் சமூகத்தை உடைத்து இருக்கிறார். எக்காரணம் கொண்டும் காங்கிரசுக்கு லிங்காயத் மக்களின் ஆதரவு கிடைக்காது.இவ்வாறு சோமண்ணா கூறினார்.