ஓடும் பஸ்சில் ஆண்-பெண் போலீசாரின் காதல் விளையாட்டு வீடியோவால் பரபரப்பு


ஓடும் பஸ்சில் ஆண்-பெண் போலீசாரின் காதல் விளையாட்டு வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 April 2018 4:15 AM IST (Updated: 9 April 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் ஆண்-பெண் போலீசாரின் காதல் விளையாட்டு வீடியோ வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

துறையூர்,

தமிழகத்தில் போலீசாரின் நடவடிக்கைகள் தொடர்பான வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பரவி காவல்துறையை சங்கடத்திற்கு உள்ளாக்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் மது அருந்திய பெண் போலீசின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது, திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து துறையூர் நோக்கி சென்ற ஒரு பஸ்சில் ஆண் மற்றும் பெண் போலீசார் காதல் விளையாட்டில் ஈடுபட்ட வீடியோ வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில், ஒரு பஸ்சின் இருக்கையில் சீருடை அணிந்த பெண் போலீஸ்காரர் ஒருவரும், அவருக்கு அருகே சீருடை அணியாத ஆண் போலீஸ்காரர் ஒருவரும் அருகருகே அமர்ந்துள்ளனர். அவர்கள் சக பயணிகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஒருவரையொருவர் தட்டிக்கொடுப்பதும், முத்தம் கொடுப்பதுமாக உள்ளனர். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோந்து வாகன போலீஸ்

அந்த வீடியோவில் இருக்கும் இருவரும் துறையூர் பகுதியில் ரோந்து வாகனத்தில் பணியாற்றியவர்கள் என்பதும், பின்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அவர்கள் முசிறிக்கு பஸ்சில் சென்றதும் தெரியவந்தது.

நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் சில மாதங்களுக்கு முன்பு தான் இரு பெண் போலீசார் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து காலை, மாலை என 12 மணி நேரத்திற்கு ஒருமுறை ஷிப்ட் அடிப்படையில் பெண் போலீசார் பணிபுரிகின்றனர். ரோந்து வாகனத்தில் பணி செய்யும் பெண் போலீசார் சரியான நேரத்திற்கு பணிக்கு வராததும், அப்படியே வந்தாலும் செல்போன்களை வைத்துக்கொண்டு வாகனத்தை விட்டு இறங்காமல் போனிலேயே மூழ்கிக்கிடக்கின்றனர் என்றும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், ரோந்து வாகனத்தில் பெண் போலீசார் அவசியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

Next Story