காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தே.மு.தி.க.வினர் 102 பேர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தே.மு.தி.க.வினர் 102 பேர் கைது
x
தினத்தந்தி 10 April 2018 4:00 AM IST (Updated: 10 April 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தே.மு.தி.க.வினர் 102 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியில் கட்சியினர், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம், ரெயில் மறியல் போராட்டம், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் உள்பட பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் 9–ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் மாவட்ட தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று காலை ஒன்று கூடினார்கள்.

இந்த போராட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, அவைத்தலைவர் முருகன், துணைச்செயலாளர் ஆனந்த், தங்கவேல், லாவண்யா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இதில் கலந்து கொண்ட பகுதி செயலாளர்கள் நைனாமலை, செந்தில்குமார், சரவணன், மாரிமுத்து, மோகன், ஒன்றிய செயலாளர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், சரவணகுமார் உள்பட கட்சியினர் பலர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பியபடி மாவட்ட தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இதில் அந்த கட்சியை சேர்ந்த 2 பேர் தலையில் மண் பானையை சுமந்தபடி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அதனால் தே.மு.தி.க.வினர் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காந்திஜி ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தே.மு.தி.க.வினரை போலீசார் கைது செய்தனர். 25 பெண்கள் உள்பட மொத்தம் 102 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story