மேட்டுப்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற வாலிபர்கள், பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்


மேட்டுப்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற வாலிபர்கள், பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 12 April 2018 3:45 AM IST (Updated: 12 April 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 2 வாலிபர்கள் திருட முயன்றனர். இதில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ரோடு ஆசிரியர் காலனியில் உள்ள ரங்கராஜ் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜன் (வயது 53). இவர் அதே பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜோதிமணி (45). கணவன்-மனைவி 2 பேரும் நேற்று காலை 6.30 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் பகல் 12 மணியளவில் வீட்டின் பின்பக்க கதவு மற்றும் ஜன்னலை 2 வாலிபர்கள் இரும்பு கம்பியால் உடைத்து கொண்டு இருந்தனர். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த மனோஜ்குமார் அங்கு வந்தார். அப்போது அந்த வாலிபர்கள் கையில் இரும்பு கம்பியுடன் நின்று கொண்டிருந்தனர். அவரை பார்த்ததும் 2 பேரும் அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து, தப்பி ஓட முயன்றனர்.

உடனே மனோஜ்குமார் அவர்களை துரத்தி சென்றார். அப்போது ஒரு வாலிபர் இரும்பு கம்பியை அவர் மீது வீசி எறிந்தார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த 2 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவரைபொதுமக்கள் மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்தனர்.

இதில் அவர் காயம் அடைந்தார். இதனிடையே சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் ‘காயம் அடைந்த அந்த வாலிபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சைக்கு பின், போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படையுங்கள்‘ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த வாலிபரின் கைகளை கயிற்றால் கட்டினர். பின்னர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி, அந்த வாலிபரின் கைது செய்தனர். பின் னர் அவரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சைக்கு பின், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் வீட்டின் கதவை உடைத்தவர் ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டம் தேவாலி பகுதியை சேர்ந்த துல்லா என்பவரின் மகன் பப்பு (20) என்பது தெரிய வந்தது.

பிடிபட்ட வடமாநில வாலிபர் கொள்ளை கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. எனவே அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மற்றொரு வாலிபர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறும்போது, பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர். 

Next Story