சீர்குலையும் நம்பிக்கை


சீர்குலையும் நம்பிக்கை
x
தினத்தந்தி 12 April 2018 11:10 AM IST (Updated: 12 April 2018 11:10 AM IST)
t-max-icont-min-icon

மனித வாழ்க்கையின் அடிப்படை நம்பிக்கை. இந்த அடிப்படையின் மீது தான் நமது சமுதாய, பொருளாதார, சமய, அரசியல் கோபுரங்களைக் கட்டமைத்திருக்கின்றோம்.

இது தன்னம்பிக்கையாக, இறை நம்பிக்கையாக, இன்னும் பல வகைகளில் வெளிப்படுகிறது. இதன் எதிர்மறை அவநம்பிக்கை, சந்தேகம். இது மனிதனை தாழ்த்தும், வீழ்த்தும்.

இன்று அறிவியல், தொழில்நுட்பத்தில் வியத்தகு சாதனைகள் நிகழ்ந்துள்ளன. சான்றுக்கு செல்போன் ஒன்றே போதும். கையில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் ஒன்றிருந்தால் போதும், நீங்கள் எங்கும் தொடர்பு கொள்ளலாம். ஆனால் நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் உங்களை ஏமாற்றலாம்; பணத்தை பறிக்கலாம்; ஏன் பைத்தியமே பிடிக்க வைக்கலாம். எந்த அளவுக்கு செல்போனை நம்புவது?

நமது நம்பிக்கைகள் தளர்கின்ற பொழுது; தகர்க்கப்படும் பொழுது நமது வாழ்க்கையில் நிலையான தன்மை இருக்காது. வாழ்க்கை தள்ளாடும். சமீப காலத்தில் நடைபெற்றிருக்கும் சிலவற்றை எண்ணிப் பார்க்கலாம்.

அரசு வெளியிடும் அடையாளப் பணம், அரசின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடையாளம். அரசின் நாணயம் சார்ந்தது. வங்கிகள், நிதி நிறுவனங்கள், பங்குச்சந்தைகள் எல்லாம் நம்பிக்கை என்ற அடித்தளத்தின் மீது கட்டப்பெற்றவை. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், பணம், பத்திரங்கள் எல்லாம் மதிப்பற்றவை; வெறும் தாள்கள், குப்பைகள்.

சமீபத்தில் அரசு அது வெளியிட்ட 1,000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாதென்று அறிவித்து, மாற்ற காலத்தவணை வழங்கி, புதுத்தாள்களை வெளியிட்டதை நாம் அறிவோம். அதனால் மக்கள் பட்டபாடு சொல்லிமாளாது.

அடுத்த இடியாக வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தவர்களின் பட்டியல் புதிய புதிய பரிமாணங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. விஜய்மல்லையா ரூ.9 ஆயிரத்து 500 கோடி, நிரவ் மோடி ரூ.13 ஆயிரம் கோடி, ஜாடின் மேத்தா ரூ.6 ஆயிரத்து 712 கோடி, நிதின்கஸ்லிவால் ரூ.5 ஆயிரம் கோடி என்று அனுமார் வால் போல நீண்டு கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் கருப்பு பணத்தை, கள்ளப்பணத்தை கட்டுப்படுத்த எல்லாப் பண நடவடிக்கைகளும் வங்கிகளின் மூலமே நடைபெற வேண்டுமென்று அரசு கட்டாயப்படுத்துகிறது. புதிய சட்டங்களின் மூலம் வங்கிகளில் வைக்கும் மக்களின் வைப்பு நிதிக்கு பாதுகாப்பு இல்லாமல் போகுமோ என்ற ஐயம் எழுகின்றது. நமது வைப்பு நிதிகளை ஒன்று திரட்டி வங்கிகள் மல்லையா போன்றவர்களுக்கு கடன்களை வாரி வழங்கி அவை வாராக் கடன்களாக போனால், வங்கியிலுள்ள நமது பணம் என்ன ஆகும்? என்ற சந்தேகம் வருகின்றது.

மக்களாட்சியில், ‘நமக்கு உழைக்க, வருவாய் தேட உரிமை இருக்கின்றது. தேடிய வருவாயை பாதுகாக்க, நமது விருப்பம் போல் பயன்படுத்த உரிமை இருக்கின்றது’ என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அது உண்மையில் நடைமுறையில் சாத்தியப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்.

இப்போது நமது நாட்டில் மக்களாட்சி நடைபெறுகின்றது. ஆனால் அரசின் கட்டுப்பாடுகள், கெடுபிடிகளும் கூடிக்கொண்டு போகின்றன. இவை எல்லாம் மக்களின் நல்வாழ்விற்காக என்றால், ஏற்றுக்கொள்ளலாம். இதுவும் ஒரு நம்பிக்கைதான். அதாவது, மக்களாட்சியில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை கட்டிக்காக்கப்பெற வேண்டும். ஆனால் இங்கு நடப்பது என்ன?

நாடு தழுவிய நிலையில் மக்களுக்கு மூன்று வகையான நம்பிக்கைகள் வேண்டும். முதலாவதாக, பாதுகாப்பு நம்பிக்கை. நாம் இருக்கின்ற இடத்திலும், பணி செய்யும் இடத்திலும், பயணங்களின் போதும் எந்த தாக்குதல் இன்றியும், அச்சமின்றியும் இருக்க வேண்டும். நமது உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். இதற்காகவே காவல்துறையும், நிர்வாகத்துறையும் செயல்படுகின்றன. இன்று மக்களுக்கு பாதுகாப்பு நம்பிக்கை இருக்கின்றதா?

வீட்டில் இருக்கின்ற பெண்கள், முதியவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? வேலை செய்ய வெளியில் செல்பவர்களும், படிக்க செல்லும் பிள்ளைகளும் அச்சமின்றி சென்று வரமுடிகிறதா? படிக்கும், வேலை செய்யும் இடங்களும் பாதுகாப்பானதுதானா? எல்லாவற்றுக்கும் நம்பிக்கையோடு நம்மால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு நிச்சயமற்ற தன்மை நம்மை நிலைகுலைய செய்கின்றது.

இரண்டாவதாக, நமது அறிவை, ஆற்றலை, திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்க வேண்டும். உழைத்தால் நன்றாக வாழ முடியுமென்ற நம்பிக்கை வேண்டும். சமத்துவம் என்பது சம உரிமைகளாக நிலைநிறுத்தப்பட வேண்டும்.

நாடு விடுதலை பெற்றபோது, ‘நல்ல வாழ்வு கிடைக்கும்’ என்ற நம்பிக்கை பிறந்தது. எல்லோருக்கும் கல்வி, திறமையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு என்ற நிலை வந்தது. அப்போது கிராம மக்களும், அடித்தட்டு மக்களும் முன்னேறினர். ஆனால் காலப்போக்கில் நிலைமையை மாற்றினர். சுயநிதி கல்வி, தொழிற்கல்வி நிலையங்களை தொடங்கினர். வசதிகளை பெற்றவர்கள் தொழிற்கல்வி, உயர் கல்வி பெற முடிந்தது. லஞ்சம், ஊழல் பெருகிய நிலையில் அரசு பணிகளும் பணம் கொடுப்பவர்களுக்கு கிடைத்தன. விதி விலக்குகள் இருக்கலாம். மொத்தத்தில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி நிலைகளிலும் நம்பிக்கை தேயத் தொடங்கியது.

மூன்றாவதாக, மக்களாட்சியில் எல்லோரும் சமம் என்பதால் நீதி அனைவருக்கும் விலையில்லாமல் கிடைக்க வேண்டும். இந்த நம்பிக்கை மிகவும் முக்கியமானது. ஆனால் இன்றுள்ள நிலையில் நீதியும், எளிதாக கிடைப்பதில்லை என்பதை அறிவோம்.

சாதாரணமானவர்களின், ஏழை எளியவர்களின் வழக்குகளை விசாரித்து உடனடியாகத் தீர்க்க கூறிவிடுவார்கள். தூக்குத் தண்டனையும் கூட வழங்கிவிடுவார்கள். ஆனால் செல்வந்தர்கள், அரசியல் தொடர்பாளர்கள் வழக்குகள் அனுமார் வாலாக நீளும். அவர்களுக்கு லட்சக் கணக்கில் கட்டணம் பெறுகின்றவர்கள் வாதாடுவார்கள். நமது சட்ட வலை, ‘பெரிய மீன்கள் தப்ப, சின்ன மீன்கள் சிக்க’ வடிவமைக்கப்பட்டு இருப்பது போன்று தோன்றுகின்றது. ‘நீதிக்கு விலை உண்டோ?’ என்ற கேள்வி பிறக்கிறது.

நீதி தேடி காவல் நிலையங்களுக்கு சென்றால் இல்லாதவர்களுக்கு தடியடியும், இருப்பவர்களுக்கு அரசு மரியாதையும் என்ற நிலை. நம்பிக்கை சீர்குலையாமல் இருக்குமா?

தனிமனித வாழ்க்கையில் இன்றும் ஓரளவு நம்பிக்கைகள் கட்டிக் காக்கப்பெறுகின்றன. இதனால் சமுதாயம் மேற்பரப்பில் அமைதிப் பூங்காவாகத் திகழ்கின்றது. நாட்டு வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை என்றால் காட்டு வாழ்க்கையாக மாறிவிடும். வலியவர்கள் வாழ்வார்கள். மெலியவர்கள் வாடுவார்கள்.

நலிந்து கொண்டிருக்கின்ற நம்பிக்கைகளை மீட்டெடுத்து வளர்க்க வேண்டும். இதில் ஆட்சியாளர்களின் பங்களிப்பு முதன்மையானது. எல்லா மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று கட்சிகள் இருக்கின்ற வரை மக்களாட்சி வலுவானதாக இருக்கும். மக்களுக்கு கட்சிகளின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். புழுதி வாரி தூற்றும் கட்சிகளால் நம்பிக்கை தளர்கின்றது.

மொத்தத்தில் நம்பிக்கைகளைக் கட்டிக் காப்பது காலத்தின் தேவை. நிலைமையை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும்.

- டாக்டர் மா.பா.குருசாமி

Next Story