களக்காடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் அடையாளம் தெரிந்தது சாவில் மர்மம் இருப்பதாக மகள் புகார்


களக்காடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் அடையாளம் தெரிந்தது சாவில் மர்மம் இருப்பதாக மகள் புகார்
x
தினத்தந்தி 13 April 2018 2:15 AM IST (Updated: 13 April 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் ஓட்டல் தொழிலாளி என அடையாளம் தெரிந்தது.

களக்காடு, 

களக்காடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் ஓட்டல் தொழிலாளி என அடையாளம் தெரிந்தது. அவரது சாவில் மர்மம் இருப்பதாக மகள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் பிணம் 

களக்காடு அருகே உள்ள கீழபுதூர் நாங்குநேரியான் கால்வாய் கரையோரத்தில் கடந்த 10–ந் தேதி ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

அடையாளம் தெரிந்தது 

போலீசாரின் விசாரணையில்,‘ பிணமாக கிடந்தவர் புதூர் கோட்டைக்கரை தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ண (வயது 48) என அடையாளம் தெரிந்தது. அவர், கேரளாவில் உள்ள கொல்லத்தில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். வேலை பிடிக்காததால் கடந்த 6–ந் தேதி ஊருக்கு வந்தார். கடந்த 9–ந் தேதி காலை நடைபயிற்சிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. வீட்டில் உள்ளவர்கள் அவர் கொல்லத்திற்கு வேலைக்கு சென்று விட்டார் என்று நினைத்து இருந்தனர். நேற்று அவர் அணிந்திருந்த சட்டை, வேட்டி மூலம் குடும்பத்தினரும், உறவினர்களும் இறந்தது கோபாலகிருஷ்ணன் என அடையாளம் கூறினர்.

மகள் புகார் 

அவருக்கு மனோண்மணி(39) என்ற மனைவியும், இசைச்செல்வி(20), இந்துமதி(10) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வரும் இசைச்செல்வி(20), 5–ம் வகுப்பு படித்து வரும் இந்துமதி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையில், பிணம் உருக்குலைந்து இருந்ததால், பரிசோதனைக்கு பிறகு அனாதை பிணமாக கருதி போலீசாரால் புதைக்கப்பட்டது. இதை அறிந்த குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவருடைய மகள் இசைசெல்வியும், உறவினர்கள் சிலரும் கூறும்போது, ‘எனது தந்தை மர்மமாக இறந்து உள்ளார். இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து முறையிட உள்ளோம்’ என்று கூறினர். இதை தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் மர்மச்சாவு குறித்து களக்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story