கலவை அருகே கிணற்றில் தவறி விழுந்து இரவு முழுவதும் தத்தளித்த விவசாயி


கலவை அருகே கிணற்றில் தவறி விழுந்து இரவு முழுவதும் தத்தளித்த விவசாயி
x
தினத்தந்தி 14 April 2018 4:30 AM IST (Updated: 14 April 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

கலவை அருகே கிணற்றில் தவறி விழுந்து இரவு முழுவதும் தத்தளித்த விவசாயி, 9 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

ராணிப்பேட்டை,

கலவை அருகே உள்ள கலவைபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 48), விவசாயி. இவர் கடந்த 11-ந் தேதி இரவு சுமார் 9 மணியளவில் நிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எட்டியப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். இந்த கிணற்றின் ஆழம் 110 அடி என கூறப்படுகிறது.

இந்த கிணற்றில் 20 அடி ஆழம் வரை தண்ணீர் இருந்ததாலும் கிணற்றில் விழுந்த ஆனந்தனுக்கு நீச்சல் தெரிந்திருந்ததாலும் நீரில் மூழ்காமல் கூச்சலிட்டுள்ளார். இரவு நேரம் என்பதால் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லை.

இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை அந்த வழியாக சென்றவர்களுக்கு ஆனந்தனின் கூச்சல் சத்தம் கேட்டு கிணற்றை எட்டி பார்த்தபோது கிணற்றிற்குள் ஆனந்தன் நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்தனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக கலவை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் கலவை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கோபால் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் வெங்கடேசன், கார்த்திகேயன், தாஜிதீன், நவீன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த ஆனந்தனை கயிறு கட்டி சுமார் 6 மணி அளவில் உயிருடன் மீட்டனர்.

இரவு முழுவதும் கிணற்றில் தத்தளித்த விவசாயி சுமார் 9 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து கிணற்றுக்குள் விழுந்தபோது தோள்பட்டையில் காயம் அடைந்திருந்த ஆனந்தனை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கலவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின்னர் ஆனந்தன் வீடு திரும்பினார்.

அதிக ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விவசாயி பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து சென்று உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story