அரசு மருத்துவமனைக்கு டாக்டர்களை நியமிக்க குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை


அரசு மருத்துவமனைக்கு டாக்டர்களை நியமிக்க  குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 17 April 2018 3:30 AM IST (Updated: 16 April 2018 10:34 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு போதுமான டாக்டர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகளிடம் இருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்து மக்கள் கட்சி திருவண்ணாமலை மாவட்ட தலைவர் விஜயராஜ் மற்றும் கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகரை சுற்றியுள்ள மற்றும் பல ஊர்களை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனை உள்ளது.

போதுமான டாக்டர்கள் இல்லாததால் பல உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. கடந்த 13-ந் தேதி காலை 6 மணிக்கு என்னுடைய சகோதரி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் மூத்த டாக்டர் இல்லாத காரணத்தால் 4 மணி நேரம் காலம் தாழ்த்தி சிகிச்சை பெற்றதால் என்னுடைய சகோதரி உயிரிழந்தார். அதனால் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை டாக்டர் இல்லை என்று சொல்லி பல மணி நேரம் காக்க வைக்கிறார்கள்.

இதனால் சமீப காலங்களில் பல உயிரிழப்பு நேர்ந்து உள்ளது. மேலும் ஆய்வக உதவியாளர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என அனைத்து பிரிவிலும் காலி பணியிடங்கள் உள்ளது. ஏழை மக்களின் உயிர் காக்கும் மையங்கள் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே, மருத்துவமனைக்கு போதுமான டாக்டர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story