2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 18 April 2018 5:00 AM IST (Updated: 18 April 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் அரசு காசநோய் மருத்துவமனையில் பன்மருந்து எதிர்ப்பு காசநோய்க்கான குறுகிய கால சிகிச்சை முறை அறிமுக நிகழ்ச்சி மற்றும் தீவிர காசநோய் கண்டுபிடிப்பதற்கான நவீன எக்ஸ்ரே உடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகன தொடக்க விழா நடந்தது.

இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தீவிர காசநோய் கண்டுபிடிப்பதற்கான நவீன எக்ஸ்ரே உடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது நிருபர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது-

பொதுவாக பன்மருந்து எதிர்ப்பு காசநோய்க்கு 18 முதல் 24 மாதம் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது 9 முதல் 12 மாதங்களுக்குள் குணப்படுத்தக்கூடிய குறுகிய கால சிகிச்சை தமிழகத்தில் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கீழ் மாத்திரைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் முதன் முறையாக 3 நோயாளிகளுக்கு இந்த குறுகிய கால சிகிச்சை முறை இன்று(அதாவது நேற்று) தொடங்கப்பட்டது. இந்த தீவிர காசநோய் கண்டுபிடிப்பதற்கான நவீன எக்ஸ்ரே உடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகனம் காஞ்சீபுரம் மாவட்ட கிராமங்களில் உள்ள நோயாளிகள் வசிக்கும் இடங் களுக்கே நேரடியாக செல்லும்.

இந்த வாகனத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, சளி பரிசோதனை கருவி மற்றும் நெஞ்சக நோய் மருத்துவர், லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே டெக்னீசியன் அடங்கிய குழுவினர் இருப்பார்கள்.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த வாகனத்தில் எக்ஸ்ரே, சளிப்பரிசோதனை இலவசமாக செய்து கொள்ளலாம். பரிசோதனை முடிவுகள் நோயாளிகளுக்கு அவர்களது இல்லங்களிலேயே அளிக்கப்படும்.

பரிசோதனை முடிவில் காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள மருந்துகள் உடனுக்குடன் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். 2025-ம் ஆண்டுக்கு முன்பாகவே தமிழகத்தில் காசநோயை முற்றிலுமாக ஒழித்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story