டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இ-சேவை மையத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பணி


டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இ-சேவை மையத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பணி
x
தினத்தந்தி 24 April 2018 3:45 AM IST (Updated: 24 April 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்கள், இ-சேவை மையத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பணியை கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்.

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகின்ற தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனத்தின் இ-சேவை மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார். மேலும் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான ஒப்புதல் சீட்டினையும் அவர் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பதற்காகவும், வாய்மொழித்தேர்வு, கலந்தாய்வு என இரண்டு முறை சென்னை சென்று வர வேண்டியிருந்தது. தற்போது அதிக தொலைவில் இருந்து வரும் தேர்வாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சான்றிதழ் சரிபார்ப்பதற்கு சென்னை வருவதை தவிர்க்கும் வகையில், அவர்களது அனைத்து சான்றிதழ்களையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவே பதிவேற்றம் செய்யலாம் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இனிவரும் தேர்வுகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக சம்மந்தப்பட்டவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சென்னை அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. இதன் முதற்கட்டமாக தற்போது குரூப் -2ஏ தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக காத்திருக்கும் தேர்வாளர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை தங்களது பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்களின் மூலமாகவே பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள், 15 தாலுகா அலுவலகங்களில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். இந்த சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஒரு பக்கத்திற்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். சான்றிதழ் பதிவேற்றம் செய்து முடித்த பின்னர் உரிய படிவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒப்புதல் ரசீது வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், கேபிள்டிவி தாசில்தார் தங்கராஜ், கலால் தாசில்தார் பால்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story