ஆண்டிப்பட்டி அருகே 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத தரைப்பாலம்

ஆண்டிப்பட்டி அருகே சேதமடைந்த தரைப்பாலம் கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி கிராமத்தில் இருந்து கண்டமனூர் செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், ஓடையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையினால் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது தரைப்பாலம் சேதமடைந்து இடிந்து விழுந்தது. அதன்பின்னர் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது. மீண்டும் சில மாதங்களில், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மறுபடியும் சேதமடைந்தது. அதன்பிறகு தரைப்பாலம் சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த வழியாக வருகிற வாகனங்கள் பாலத்தின் ஓரமாக மண்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
பாலம் இடிந்த காரணத்தால், இந்த சாலையின் வழியாக கனரக வாகனங்கள் இயக்கப்படுவதில்லை. இடிந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளாக எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.
இடிந்த நிலையிலேயே பாலம் பரிதாபமாக காட்சி அளித்து கொண்டிருக்கிறது. தினமும் அந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் கண்டமனூர், கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த மக்கள் வேலப்பர் கோவிலுக்கு செல்ல இந்த சாலையையே அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே பொதுமக்கள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இடிந்த நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story