கர்நாடக சட்டசபை தேர்தலில் 3,925 வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று மனுக்கள் பரிசீலனை நடக்கிறது

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மனுதாக்கல் செய்ய கடைசிநாளான நேற்று வேட்பாளர்கள் படையெடுத்தனர். மொத்தம் 3,925 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மனுதாக்கல் செய்ய கடைசிநாளான நேற்று வேட்பாளர்கள் படையெடுத்தனர். மொத்தம் 3,925 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று (புதன்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
சட்டசபை தேர்தல்
இந்த ஆட்சியின் பதவிக் காலம் அடுத்த மாதம் (மே) 28-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 17-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி தொடங்கியது. முதல் நாளில் 34 மனுக்கள் தாக்கல் ஆனது. கடந்த 18-ந்தேதி பசவ ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை மற்றும் 22-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகியவற்றை தவிர்த்து நேற்று முன்தினம் வரை 1,127 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சித்தராமையா மனு தாக்கல்
வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று இறுதிநாளாகும். இதனால் மனு தாக்கல் செய்ய அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சைகள் தேர்தல் அலுவலகங்களுக்கு படையெடுத்து வந்தனர். இறுதிநாளான நேற்று முதல்-மந்திரி சித்தராமையா பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளுடன் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்தார். பாதாமியில் சித்தராமையாவை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளராக ஸ்ரீராமுலு களமிறக்கப்பட்டுள்ளார். அவரும் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதேப் போல் மண்டியா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகர் அம்பரீஷ் தனது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் கொடுக்காததால் போட்டியிடவில்லை. ஆனால் அவர் தனது உடல்நிலை காரணமாக சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறினார். இதனால் மண்டியா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மாவட்ட தலைவரான ரவிகுமார் என்கிற கனிகா ரவி மனு தாக்கல் செய்தார்.
வேட்பாளர்கள் மாற்றம்
மேலும் நேற்று பா.ஜனதா கட்சி அரிசிகெரே, மதுகிரி, சிரா, மேல்கோட்டை, மண்டியா, சீனிவாசப்பூர் ஆகிய 6 தொகுதிகளில் திடீரென்று வேட்பாளர்களை மாற்றியது. புதியதாக அறிவிக்கப்பட்ட 6 வேட்பாளர்களும் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். அக்கட்சி வருணா, பாதாமி தொகுதிகளில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை அறிவிக்கவில்லை. இருப்பினும் வருணாவில் அக்கட்சியின் மாவட்ட செயல் தலைவரான தொட்டதப்ப பசவராஜ் என்பவருக்கு ‘பி‘ பாரம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவரும் நேற்று மாலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் பாதாமியிலும் பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீராமுலுவும் ‘பி‘ பாரம் பெற்று மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேப் போல் ஜனதாதளம் (எஸ்), பா.ஜனதா, ஆம்ஆத்மி உள்பட பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைகளும் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
3,925 மனுக்கள் தாக்கல்
இந்த தேர்தலில் முக்கியமாக முதல்-மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளிலும், கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா சிகாரிபுராவிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி ராமநகர் மற்றும் சென்னபட்டணா ஆகிய 2 தொகுதிகளிலும் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் பா.ஜனதாவை சேர்ந்த ஈசுவரப்பா சிவமொக்கா நகர் தொகுதி யிலும், ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியிலும், ஸ்ரீராமுலு முலகால்மூரு, பாதாமியிலும் மனு தாக்கல் செய்தனர்.
ஆளும் காங்கிரஸ் சார்பில் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கொரட்டகெரே, மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கனகபுரா, மந்திரி கே.ஜே.ஜார்ஜ் சர்வக்ஞநகர், மந்திரி ராமலிங்கரெட்டி பி.டி.எம்.லே-அவுட் ஆகிய தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளனர். இறுதிநாளான நேற்று ஒரே நாளில் 2,798 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 17-ந்தேதி முதல் கடைசிநாளான நேற்று வரை மொத்தம் 3 ஆயிரத்து 925 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இன்று மனுக்கள் பரிசீலனை
மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று(புதன்கிழமை) மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் (27-ந் தேதி) கடைசி நாள் ஆகும். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும். அதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும்.
Related Tags :
Next Story