மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்: பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்: பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 3 May 2018 4:22 AM IST (Updated: 3 May 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 2 மாணவர்கள் பலியானார்கள். ஒருவரது உயிர் ஊசலாடுகிறது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பெரியார்நகரை சேர்ந்தவர் ஜான்வெஸ்லி(வயது18). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். இவருடன் தேர்வு எழுதிய நண்பர்களான சோழவரத்தை சேர்ந்த சுரேந்தர்(18), காரனோடையை சேர்ந்த ஜெய்பிரகாஷ்(18) ஆகிய 3 பேரும் நேற்று பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள நண்பரை பார்க்க நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் நேற்று மாலை நண்பர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களது மோட்டார் சைக்கிள் பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் கன்னிகைபேர் தனியார் இறால் கம்பெனி அருகே சென்றது. அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜான்வெஸ்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்தில் சிக்கிய சுரேந்தர், ஜெய்பிரகாஷ் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுரேந்தர் பரிதாபமாக இறந்தார்.

பலத்த காயம் அடைந்த மற்றொரு நண்பரான ஜெய்பிரகாஷ் ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்ற வாகனத்தை தேடிவருகிறார்கள்.

விபத்தில் பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story