6 கவுன்சிலர்களின் தகுதி நீக்கத்தை உறுதி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு


6 கவுன்சிலர்களின் தகுதி நீக்கத்தை உறுதி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 May 2018 5:09 AM IST (Updated: 6 May 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

பீட் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் 6 பேரின் தகுதி நீக்கத்தை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

அவுரங்காபாத்,

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் 6 பேர் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக பீட் மாவட்ட கலெக்டர் எம்.டி.சிங் சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் 6 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் உத்தரவை மராட்டிய கிராமப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி பங்கஜா முண்டே ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் பஜ்ரங் சோனாவானே மும்பை ஐகோர்ட்டு அவுரங்காபாத் கிளையில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதி போரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மந்திரி பங்கஜா முண்டேயின் நடவடிக்கை இயற்கையான பொது ஒழுங்குக்கு எதிராக இருப்பதாகவும், சட்டத்தின்படி இது மிகவும் தவறானது எனவும் கூறிய நீதிபதி, சம்பந்தப்பட்ட மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களை தகுதி நீக்கம் செய்த மாவட்ட கலெக்டரின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு கூறினார்.

இதனால் சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் 6 பேரும் வருகிற சட்ட மேலவை தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளனர்.

Next Story