மும்ரா நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணி கிழக்கு விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்


மும்ரா நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணி கிழக்கு விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 9 May 2018 5:00 AM IST (Updated: 9 May 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

மும்ரா நெடுஞ்சாலை சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளதால் கிழக்கு விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தானே, 

மும்ரா நெடுஞ்சாலை சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளதால் கிழக்கு விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கடும் போக்குவரத்து நெரிசல்

தானே மும்ரா நெடுஞ் சாலையில் நேற்று முன்தினம் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இதையடுத்து சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாது. இந்தநிலையில் சீரமைப்பு பணி காரணமாக நேற்று காலை கிழக்கு விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக முல்லுண்டு பகுதியில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

மும்ரா நெடுஞ்சாலை வழியாக தான் தினமும் சுமார் 15 ஆயிரம் கன்டெய்னர் லாரிகள் குஜராத், ஆமதாபாத், நாசிக், பிவண்டி போன்ற பகுதிகளில் இருந்து நவிமும்பை, ஜவகர்லால் நேரு துறைமுகத்திற்கு வருகின்றன. இதேபோல பல்லாயிரக் கணக்கில் சிறு வாகனங்களும் அந்த வழியாக செல்கின்றன.

ஆனந்த் நகர் சுங்கச்சாவடி

போக்குவரத்து நெரிசல் குறித்து தானே போக்குவரத்து துணை கமிஷனர் அமித் காலே கூறியதாவது:-

மும்ரா நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணி நடந்து வருவதால் நேற்று காலை ஆனந்த் நகர் சுங்கச்சாவடி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூடுதலாக ஒரு பாதை அமைக்கப்பட்ட பிறகு இந்த நெரிசல் சரிசெய்யப்பட்டது.

சீரமைப்பு பணி குறித்து அறிந்த பலர் வேறு வழியாக சென்றுவிட்டனர். எனவே கல்வா, மும்ரா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story