கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் ஆபத்து குளியல்


கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் ஆபத்து குளியல்
x
தினத்தந்தி 10 May 2018 4:00 AM IST (Updated: 10 May 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான இடங்களில் குளிப்பதால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

தேனி

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. வருடத்தின் பெரும்பாலான நாட்களில் இந்த அருவியில் தண்ணீர் வரத்து இருக்கும். இதனால், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஒரு மாத காலமாகவே அருவியில் தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. சில நாட்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கோடை காலத்தில் குளு, குளு பகுதியாக திகழ்வதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அருவியில் குளிப்பதற்கு இடமின்றி, அருவிக்கு தண்ணீர் வரும் பகுதிகளில் ஆங்காங்கே குளிக்கின்றனர். அத்துடன், அருவியில் இருந்து தண்ணீர் விழுந்து ஆறாக பயணிக்கும் பகுதியில் உள்ள குதிரை கஜம் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். இந்த பகுதியானது ஆபத்தான பகுதி ஆகும். குதிரைகஜம் பகுதியில் குளிப்பதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும், ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர்.

சிலர், தங்கள் குழந்தைகளுடன் இந்த பகுதியில் இறங்கி குளிக்கின்றனர். கடந்த 10 நாட்களில் இங்கு குளித்த, 20-க்கும் மேற்பட்டவர்கள் வழுக்கி விழுந்து லேசான காயம் அடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து ஆபத்தான குளியல் தொடர்வதால் விபரீதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

எனவே, சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் இங்கு கூடுதல் வனத்துறை பணியாளர்களை நியமித்து, தடை செய்யப்பட்ட பகுதிகள், ஆபத்தான இடங் களில் சுற்றுலா பயணிகள் குளிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story