தஞ்சை மாவட்டத்தில் 24 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை கலெக்டர் வழங்கினார்


தஞ்சை மாவட்டத்தில் 24 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 10 May 2018 10:45 PM GMT (Updated: 10 May 2018 7:29 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 24 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி மற்றும் கருத்தரங்கம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு 24 திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினத்தவருக்கான அடையாள அட்டையினை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகளுக்கு சமூக நலத்துறையின் சார்பில் பிளாஸ்டிக் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டை திருநங்கைகளின் பயணத்திற்கு எளியதாகவும், எந்தவித தடையில்லாமல் செல்வதற்கும் பயன்படும். அதே போன்று தேர்தல் தாசில்தார் மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவங்கள் தரப்படவுள்ளது. வாக்காளர் பட்டியலில் இல்லாத திருநங்கைகள் இந்த படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசு திருநங்கைகளுக்கு தாட்கோ மூலம் ஆட்டோ மற்றும் கார் வாங்குவதற்கான கடனுதவி, மாவட்ட தொழில் மையம் மூலம் சுய வேலைவாய்ப்பு தொடங்குவதற்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்தும், நிதி உதவிகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்பு பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையலாம்.

திருநங்கையாக பிறந்து விட்டோம் என்று தாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பயிற்சி நன்றாக எடுத்துக்கொள்ளும் பொழுது உங்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். உங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய பாலினம் ஒரு தடையாக இருக்காது. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் சண்முகசுந்தர், தாட்கோ மேலாளர் தியாகராஜன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ரவீந்திரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் அண்ணாதுரை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனர் ராஜசேகரன், சமூகநல அலுவலக கண்காணிப்பாளர் பூரணசந்திரன் மற்றும் அதிகாரிகள், திருநங்கைகள் கலந்துகொண்டனர். 

Next Story