பேனர் வைத்ததில் தகராறு: தேனாம்பேட்டையில் வாலிபர் வெட்டிக்கொலை
சென்னை தேனாம்பேட்டையில் திருமண வரவேற்பு பேனர் வைத்தது தொடர்பான தகராறில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மதன் (வயது 27). இவர் சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இவரது நண்பர் ஒருவருக்கு நடந்த திருமணம் தொடர்பாக மதனும், அவரது மற்றொரு நண்பர் தீபக்கும் சேர்ந்து சத்தியமூர்த்தி நகரில் திருமண வரவேற்பு பேனர் வைத்திருந்தனர். பேனர் வைத்ததற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது.
வெட்டிக்கொலை
நேற்று பகலில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் மதனையும், தீபக்கையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில் மதனும், தீபக்கும் கலந்துகொண்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மதனை சிலர் ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டினார்கள். தடுக்க முயன்ற தீபக் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மதன் பரிதாபமாக இறந்தார். தீபக் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
வலைவீச்சு
தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் முத்தழகு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் போலீஸ் படையோடு கொலை நடந்த சத்தியமூர்த்திநகர் பகுதிக்கு சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்ட மதனின் ஆதரவாளர்கள் திரண்டு எதிர்தரப்பினரின் வீடுகளுக்குள் புகுந்து தாக்க முற்பட்டனர்.
உடனே போலீசார் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார்கள். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் 6 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story