மாவட்ட செய்திகள்

கொட்டகையில் கட்டியிருந்த 6 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது + "||" + Built in the shed 6 Sheep is a mysterious beast Killing bite

கொட்டகையில் கட்டியிருந்த 6 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது

கொட்டகையில் கட்டியிருந்த 6 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது
செஞ்சி அருகே கொட்டகையில் கட்டியிருந்த 6 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது. மீண்டும் சிறுத்தை அட்ட காசம் செய்துள்ளதாக நினைத்து கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
செஞ்சி,

செஞ்சி அருகே மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ளது இல்லோடு கிராமம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவில் இந்த கிராமத்துக்குள் மர்ம விலங்கு புகுந்து, வீடுகளின் வெளியே கட்டிப்போட்டிருந்த ஆடு, மாடுகளை கடித்து குதறியது. இதில் பல ஆடு, மாடுகள் இறந்தன. மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாகவும், நள்ளிரவில் அவை கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கடித்து கொன்றதாக கிராம மக்கள் வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.


அதன்படி மலைப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்தனர். மேலும் அந்த விலங்கை பிடிக்க 3 இடங்களில் கூண்டும் வைக்கப்பட்டன. ஆனால் கண்காணிப்பு கேமராக்களில் அந்த விலங்கின் உருவம் பதிவாக வில்லை. கூண்டிலும் சிக்கவில்லை. அதன்பிறகு விலங்கால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அந்த கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் இறந்துள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு.

இல்லோடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(வயது 37). இவருடைய விவசாய நிலம் மலை அடிவாரப்பகுதியில் உள்ளது. சேகர் விவசாயம் மட்டுமின்றி 11 ஆடுகளையும் வளர்த்து வந்தார். தினமும் மேய்ச்சலுக்கு சென்று வந்ததும், அந்த ஆடுகள் விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து விடுவார். அதன்படி நேற்று முன்தினம் மாலையில் 11 ஆடுகளையும் கொட்டகையில் அடைத்து விட்டு, சேகர் வீட்டிற்கு சென்று விட்டார். அதில் 8 ஆடுகளை கயிற்றால் கட்டியிருந்தார். 3 ஆடுகளை கட்டவில்லை.

நேற்று காலையில் சேகர் வந்து பார்த்தபோது 6 ஆடுகள் இறந்து கிடந்தன. அதன் கழுத்து, வயிறு, கால் பகுதியில் மர்ம விலங்கு கடித்து குதறியதற்கான காயங்கள் இருந்தன. 2 ஆடுகளை காணவில்லை. கட்டப்படாமல் இருந்த 3 ஆடுகள் கிணற்றின் ஓரத்தில் நின்றிருந்தன.

இந்த தகவல் காட்டுத்தீ போல கிராமம் முழுவதும் பரவியது. இதையடுத்து கிராம மக்கள் திரண்டு மலை அடிவாரப்பகுதிக்கு வந்து, இறந்து கிடந்த ஆடுகளை பார்த்தனர். நள்ளிரவில் மலைப்பகுதியில் இருந்து மர்ம விலங்கு வந்து 6 ஆடுகளையும் கடித்து கொன்றிருக்கலாம் எனவும், மேலும் 2 ஆடுகளை கடித்து மலைப்பகுதிக்குள் கொண்டு சென்றிருக்கலாம் எனவும் கிராம மக்கள் சந்தேகிக்கிறார்கள்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துக்குள் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. தற்போது கோடை காலம் என்பதாலும், மலைப்பகுதியில் உணவு இல்லாததாலும் விலங்குகள் மலை அடிவாரத்துக்கு வந்து விவசாய பயிர்களை உண்ணுகின்றன. நள்ளிரவில் வந்தது சிறுத்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம். இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் அவர், இது பற்றி உயர் அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும், கால்நடைத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கால்நடைத்துறை மருத்துவர்கள் நேரில் வந்து, இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் அதனை பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.