கர்நாடக தேர்தல் முடிவு தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும், கும்பகோணத்தில் அர்ஜூன்சம்பத் பேட்டி


கர்நாடக தேர்தல் முடிவு தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும், கும்பகோணத்தில் அர்ஜூன்சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 12 May 2018 5:00 AM IST (Updated: 12 May 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக தேர்தல் முடிவு தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கும்பகோணத்தில் அர்ஜூன்சம்பத் கூறினார்.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதோடு, வேலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு மணல் கடத்தல் கும்பலை ஒடுக்க வேண்டும். மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா சென்ற தமிழக இளைஞர் திருமணி கலவரக்காரர்களால் நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் உயிரிழந்துள்ளார். எனவே மத்திய, மாநில அரசுகள் கல்வீச்சில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

காஷ்மீரும் இந்தியாவில் ஒரு பகுதி, அங்கு சுற்றுலா செல்லும் மக்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும். அங்கு ராணுவத்திற்கு எதிராக கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதேசி பொருளாதாரத்தை ஆதரித்தும், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து சிறு வணிகர்களை பாதுகாக்கவும், இந்து வணிகர்களின் உரிமையை மீட்கவும் வருகிற 29-ந்தேதி கும்பகோணத்தில் இந்து வணிகர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் ரஜினிகாந்த் பற்றி வெறுப்புணர்வோடு கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பரப்புரை முடிவுற்ற நிலையில், எங்களது கருத்துகணிப்பின் படி கர்நாடகாவில் பா.ஜ.க. தனிப்பெரும்பாண்மையில் வெற்றிபெறும். கர்நாடக தேர்தல் முடிவு தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார் என ராகுல்காந்தி கூறுகிறார். ஆனால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. வருகிற 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் மோடியே வெற்றிபெறுவார். மோடி மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரையில் மோடி நல்ல அஸ்திவாரம் அமைத்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் அதன் முழு பலனை மக்களுக்கு கிடைக்கிற வகையில் மோடி ஆட்சி செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் டி.குருமூர்த்தி, நகர பொதுச்செயலாளர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story